Published:Updated:

அனைவருக்கும் நிதிக் கல்வி தர வேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

நிதி சார்ந்த திட்டங்களில் நமது குடும்பத்தினர் செய்திருக்கும் சேமிப்பு (Household Financial Saving) குறித்து ஆர்.பி.ஐ வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் முக்கியமான பல விஷயங்களை நமக்கு உணர்த்துவதாக இருக்கின்றன.

ஆர்.பி.ஐ அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த மூன்று நிதியாண்டுகளில் (2017-18, 2018-19, 2019-20) நிதி சார்ந்த சொத்துகளில் நம் குடும்பத்தினரின் மொத்த சேமிப்பு நமது ஜி.டி.பி-யில் 12 சதவிகிதத்திலிருந்து 10.6 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. அதேநேரத்தில், கடந்த மூன்று நிதியாண்டுகளில் நாம் வாங்கிய நிதிக் கடன் அளவு 4.2 சதவிகிதத்திலிருந்து 2.9 சதவிகிதமாகக் குறைந்திருப்பது ஆரோக்கியமானதே. அது மட்டுமல்ல, நிதித் திட்டங்களில் நமது நிகர சேமிப்பு 2018-லிருந்த நிலைக்கே அதாவது, 7.7 சதவிகிதத்துக்கே திரும்பியிருப்பதும் பாசிட்டிவ்வான செய்தியே. கடந்த 2018-19-ம் ஆண்டில் இது 7.2 சதவிகிதமாக இருந்தது.

காலம் காலமாக மண்ணிலும் பொன்னிலும் முதலீடு செய்வதுதான் நம் மக்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த முதலீடு. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த முதலீடுகள் நல்ல வருமானத்தையும் பாதுகாப்பையும் தரவே செய்தன. ஆனால், இந்த நம்பிக்கையில் சில கேள்விகள் பிறந்ததன் விளைவுதான் தற்போது மக்களை நிதி சார்ந்த திட்டங்களை நோக்கி வரச் செய்திருக்கிறது. ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சியானது தேக்கத்தில் இருப்பதாலும், தங்கத்தின் விலை வாங்க முடியாத நிலையில் இருப்பதாலும் மக்கள் நிதி சார்ந்த திட்டங்களை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். இனிவரும் ஆண்டுகளில் இந்தப் போக்கு அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம்.

ஆனால், இந்தப் புள்ளிவிவரங்களைச் சற்று உன்னிப்பாக கவனித்தால், இன்னொரு நெருடலான விஷயமும் தெரியும். நமது சேமிப்பில் 52.6% வங்கி எஃப்.டி-யிலும், 13.4% ரொக்கமாகவும், 23.2% ஆயுள் காப்பீட்டிலும், 7% மியூச்சுவல் ஃபண்டிலும் இருக்கின்றன. இது எதைக் காட்டுகிறது? `வட்டி குறைவாகக் கிடைத்தாலும், வங்கி எஃப்.டி-யே பாதுகாப்பானது’ என்று நினைக்கிறார்கள் மக்கள். எதன்மீதும் நம்பிக்கை இல்லாததால்தான் 13% பணத்தை ரொக்கமாக வைத்திருக்கிறார்கள். `ஆயுள் காப்பீடு வாழ்க்கைக்குப் பாதுகாப்பு’ என்று புரிந்துகொள்ளாமல், `அது மிகச் சிறந்த சேமிப்பு’ என்று நினைக்கிறார்கள். `நீண்டகாலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும்’ என்று நினைப்பவர்களே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள்.

சாதாரண மக்களுக்கு நிதிக் கல்வி அளிப்பதன் மூலமும், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளில் இருக்கும் ரிஸ்க்கைக் குறைப்பதன் மூலமும்தான் இன்னும் அதிகமானவர்களை நிதி சார்ந்த திட்டங்களுக்கு அழைத்துவர முடியும். மத்திய அரசாங்கம் அதைச் செய்யுமா?

- ஆசிரியர்