Published:Updated:

சீனாவை எதிர்த்து கோஷம் போட்டுப் பலனில்லை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

சீனாவை எதிர்த்து கோஷம் போட்டுப் பலனில்லை!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவிவரும் இந்த வேளையில், `சீனத் தயாரிப்புகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்’ என்ற கோரிக்கை பலமாக எழுந்திருக்கிறது. பல ஆண்டுக்காலமாக இருந்துவரும் கோரிக்கைதான் இது. என்றாலும், தற்போது இந்திய-சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டிருப்பதால், தற்போது சீனப் பொருள்களைத் தவிர்க்கும் கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது.

சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை நம்மால் தவிர்க்க முடியுமா என்று பார்த்தால், `மிக மிகக் கடினம்’ என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், இன்றைய நிலையில், சீனாவிலிருந்து நம் நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருள்களின் பட்டியலைப் பார்த்தால், நமக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. மருந்துப் பொருள்களுக்கான மூலப்பொருள்கள் 76%, உரங்களுக்கான மூலப்பொருள் 45%, மின்னணுச் சாதனங்களில் 38%, அணுமின் சாதனங்கள் 31%, ஆட்டோ உதிரி பாகங்கள் 25%, செல்போன் உதிரி பாகங்கள் 25%, பிளாஸ்டிக் 18% எனப் பல்வேறு பொருள்களுக்கு நாம் சீனாவையே நம்பிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டால், சீனப் பொருள்களைத் தவிர்ப்பது என்ற முடிவுக்கு உடனடியாக வருவது சாத்தியமில்லை என்பது நன்றாகவே புரியும்.

என்றாலும், இந்தச் சிந்தனையில் தவறு ஒன்றுமில்லை. அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் சீனத் தயாரிப்புகளைப் பெருமளவில் குறைப்பது என்று இலக்கு நிர்ணயித்து நாம் செயல்படுவதே சரியான முடிவாக இருக்கும். ஒரு பொருளை சீனாவிடமிருந்து வாங்க முக்கியமான காரணம் என்ன? பொருள் உற்பத்திக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி, மிகக் குறைந்த சம்பளத்தில் வேலையாட்களைப் பணியமர்த்தி, சொன்ன நேரத்தில் ஓரளவுக்குத் தரமாகச் செய்து தருவதால்தான் சீனா இன்றைக்கு உலகின் உற்பத்திக் கேந்திரமாக இருக்கிறது. இந்த நிலையை சீனா ஒன்றிரண்டு ஆண்டுகளில் எட்டிவிடவில்லை. ஏறக்குறைய 40 ஆண்டுகளாகத் திட்டமிட்டு செயல்பட்டுவந்திருக்கிறது. சீனாவைப்போல நாமும் தெளிவான திட்டத்தை வகுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

ஆனால் முக்கியமான கேள்வி, இப்படிப்பட்ட திட்டம் நம்மிடம் இருக்கிறதா என்பதுதான். இதுவரை இல்லையென்றாலும் பரவாயில்லை, இனியாவது உருவாக்கி, அதன்படி செயல்படுவதே நாம் இப்போது செய்ய வேண்டிய காரியமாக இருக்கும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சில நாள்களுக்கு முன்னரே அறைகூவல் விடுத்துவிட்டார். ஆனால், ஆட்சியாளர்களும் அரசுத்துறைகளும் தெளிவான திட்டங்களை வரையறுத்துச் செயல்பட்டால் மட்டுமே நாம் உண்மையான சுயச்சார்பை அடைய முடியும். இல்லாவிட்டால், இது வெறும் கோஷமாகவே இருக்கும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism