Published:Updated:

பொருளாதாரத்தை வளர்க்கும் வேலைவாய்ப்பு!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

டந்த இரு மாதங்களாகத் தொடர்ந்துவரும் ஊரடங்கு நடைமுறையால் இந்தியப் பொருளாதாரமே சீர்குலைந்துபோயிருக்கிறது.

கொரோனா தொற்றுநோயால் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நம் நாட்டின் பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றன. விளைவு, இந்தியா முழுக்க ஏறக்குறைய 12 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.

கோவிட்-19 நோய்த் தொற்றால் உலகம் முழுக்கவே பல நாடுகளில், பல கோடிப் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். என்றாலும், உலகின் மற்ற நாடுகளில் வேலையை இழந்தவர்களுக்கும் நம் நாட்டில் வேலையை இழந்தவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. வளர்ந்த நாடுகளில் வேலையை இழப்பவர்கள் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு அரசே உதவித்தொகையை வழங்கிவிடுகிறது.

ஆனால், நம் நாட்டில் அப்படியல்ல. வேலையை இழந்தால் அரசிடமிருந்து எந்த நிதியுதவியும் கிடைக்காது. கடந்த காலத்தில் கிடைத்த சம்பாத்தியத்திலிருந்து கொஞ்சம் சேமித்து வைத்திருக்கவில்லையெனில், குடும்பமே பட்டினி கிடக்க வேண்டும்.

இந்த நிலையில், வேலையிழந்த இந்த 12 கோடிப் பேருக்கும் மீண்டும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் சூழலை ஏற்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் முக்கியமான இலக்கு. ஊரடங்கு நடவடிக்கைகள் ஓரளவுக்குத் தளர்த்தப்பட்ட பிறகும் வர்த்தகம் வளர்ச்சி வேகமெடுக்கத் தொடங்கவில்லை. தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கவில்லை. மக்களிடமும், தொழில் நிறுவனங்களிடம் பணமில்லை என்ற சூழலில், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலையே ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்னையில் தலையிட்டு, சரியான தீர்வை ஏற்படுத்தித் தருவதற்கு இதுவே சரியான தருணம். ஒவ்வொரு துறையிலும் புதிய வேலைவாய்ப்புகளை எந்த அளவுக்கு உருவாக்கலாம், அதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆழமாக யோசித்து, செயல்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுவது போன்ற சூழலை ஏற்படுத்துவதன் மூலம்தான் புதிய வேலைவாய்ப்புகளை அரசாங்கங்களால் உருவாக்க முடியும்.

இன்றுள்ள நிலையில், கோவிட்-19 நோய்த் தொற்றால் இறப்பவர்களைவிட, பொருளாதாரச் சரிவால் ஏற்பட்ட பாதிப்பில் இறப்பவர்களே அதிகமாக இருப்பார்கள். இனியாவது பல லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுப்பதாக கணக்குக் காட்டாமல், உண்மையிலேயே நல்ல திட்டங்களைத் தீட்டி, வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை அரசு உணரட்டும்!

- ஆசிரியர்