Published:Updated:

மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
`கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தொடர்ந்துவரும் ஊரடங்கு நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்’ என்று ஏங்கத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்கள் பரிமாற்றமாவதைத் தவிர, ஏறக்குறைய எல்லா நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன.

கொரோனா என்ற இந்தக் கொடியநோயை மேலும் பரவவிடாமல் தடுப்பதிலேயே அரசின் முழு கவனமும் சென்றுகொண்டிருப்பதை யாரும் குறை சொல்ல முடியாது. என்றாலும், கொரோனா வந்த பிறகு உலகம் முழுக்கப் பேசப்படும் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். ‘Reset’ என்ற வார்த்தையை இன்றைக்குப் பலரும் பயன்படுத்துகிறார்கள். `மீண்டும் புதிதாகத் தொடங்குவது’ என்பதே இதன் அர்த்தம். அதாவது, பழைய நடைமுறைகளைப் புதிதாக மாற்றி அமைத்துக்கொள்வதே ‘ரீசெட்.’ இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல என்றாலும், சவால் நிறைந்த இந்த வேலையை நாம் இப்போது செய்யாவிட்டால், பிறகு எப்போதாவது செய்வோமா என்பது சந்தேகமே.

உதாரணமாக, ஊரடங்கு காரணமாக நம் நாட்டில் சுமார் 10 கோடி பேர் வருமானம் ஈட்டும் வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் சில ஆயிரம் ரூபாயை உதவித்தொகையாகத் தர வேண்டும் எனில், யாருக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதியுதவி தர வேண்டும், எந்த அளவுக்குத் தர வேண்டும் என்பது குறித்து நம்மிடம் எந்த டேட்டாவும் இல்லை. ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவரும், ரேஷன் கடையில் அரிசியுடன் அரசால் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை வாங்குகிறார்; ஏழைத் தொழிலாளியும் வாங்குகிறார். அரசின் உதவி யாருக்குச் செல்ல வேண்டும் என்பதில் தெளிவு இல்லாததால், நெல்லுக்கும் புல்லுக்கும் நீர் பாய்ந்து, பெரும் பணம் வீணாகிறது. இதனால் தங்களுக்கு வருமானம்தான் என்பதை அறிந்தே அரசியல்வாதிகள் இதை மாற்றாமல் வைத்திருக்கின்றனர்.

மத்திய அரசாங்கம் இனி ஒரு பெரும் தகவல்தொழில்நுட்பத் திட்டத்தை அறிவிக்கட்டும். இந்தத் திட்டத்தின்படி, ‘ஒவ்வொருடைய ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், பான் எண்ணுடன் ரேஷன் கார்டு இணைக்கப்படும். ஒருவருடைய வருமானத்தை அடிப்படையாகவைத்தே அவருக்கான அரசு உதவி அவருடைய வங்கிக் கணக்குக்கு நேரடியாகத் தரப்படும்’ என மத்திய அரசு அறிவித்துச் செயல்பட்டால் அரசின் நிதி, தேவைப்படாதவர்களுக்குச் சென்று, அநியாயத்துக்கு வீணாவது தடுக்கப்படும். இதுபோல ஒவ்வொரு துறையிலும் ‘ரீசெட்’ என்ற அடிப்படையில் புதிதாகக் கொண்டுவர வேண்டிய நடைமுறைகளை யோசித்து, அவற்றைச் செயல்படுத்தலாம்.

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் கட்டாய கால அவகாசத்தைப் பயன்படுத்தி சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலமே மக்களின் நலனைக் காக்க முடியும்!

- ஆசிரியர்