Published:Updated:

நீங்கள் முக்கியம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

நீங்கள் முக்கியம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கொரோனாப் பெருந்தொற்றின் முதல் அலையிலிருந்து மீண்டுகொண்டிருந்த நாம், அதீத நம்பிக்கை காரணமாக இரண்டாம் அலையின் வீரியத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். அதன் அசுரத்தனமான வேகத்தைப் புரிந்துகொள்ளாமல் அலட்சியமாகவும் அசட்டையாகவும் இருந்துவிட்டோம். இங்கே `நாம்' என்று குறிப்பிடுவது அரசை மட்டுமல்ல, குடிமக்களாகிய நம்மையும் சேர்த்துத்தான். இதன் விளைவுகளை எல்லோரும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

எதிரி நாடுகளுடன் நடத்தப்படும் யுத்தமாக இருந்தாலும் சரி, கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்கிற எதிரியோடு நடத்தப்படும் போராக இருந்தாலும் சரி... பதுங்குவது என்பது ஒரு போர்த் தந்திரமே. அதையே இப்போது நாம் கையாள வேண்டும். அதற்காகவே இரண்டு வார கால ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஊரடங்கு அமலானபோது, அதற்கு நாம் முழுமையாகத் தயாராகவில்லை. அதனால் தடுமாறிப்போனோம். இம்முறை இதை நாம் எதிர்பார்த்து இருந்தோம். கடைகளைத் திறந்து, சிறப்புப் பேருந்துகளை இயங்க வைத்து, அரசும் போதுமான முன்தயாரிப்புகளைச் செய்திருந்தது வரவேற்கத்தக்க விஷயம்.

`இப்போது நாம் பார்ப்பதைவிட அடுத்த சில நாள்களில் கொரோனாவின் தீவிரம் இன்னும் மோசமாக இருக்கக்கூடும்' என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். இப்போதே சிகிச்சையளிக்க படுக்கை வசதிகளும் மருத்துவ வசதிகளும் போதாமல் நாம் திண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஓராண்டுக்கும் மேலாக மனம் தளராமல் நம் மருத்துவர்களும் முன்களப் பணியாளர்களும் தங்களின் உடல்நலம், குடும்பம், பசி, தூக்கம் என எல்லாம் மறந்து மக்களைக் காப்பாற்றப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சுமை மேலும் கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.

தலையங்கம்
தலையங்கம்

கொரோனாவை எதிர்த்துப் போரிட நம்மிடம் இருப்பது இரண்டே ஆயுதங்கள்தான். ஒன்று, தடுப்பூசி; இன்னொன்று, ஊரடங்கு. இதில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மாநில மற்றும் மத்திய அரசுகளின் கடமை. அடுத்ததாக ஊரடங்கு. இதற்கு முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியது மக்களாகிய நாம்தான். விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு ஊரடங்கு என்பது வலி நிறைந்த வாழ்வாதாரப் பிரச்னை. ஊரடங்கின்போது அரசு கொடுக்கும் நிவாரணத் தொகை, இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர ஏழை எளிய மக்களுக்கு ஓரளவு உதவும். புதிய முதல்வர் ஸ்டாலின், இந்த மாபெரும் சவாலை எதிர்கொள்ள மாவட்டம்தோறும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்திருப்பதும், பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதும் நல்ல தொடக்கம்.

ஊரடங்கு என்பது மக்களுக்குத்தான் முடங்கியிருக்க வேண்டிய காலம், அரசுக்கு அல்ல. எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் தற்காலிக மருத்துவ முகாம்கள், மருத்துவமனைப் படுக்கை வசதி, கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், மருந்துகள், ஆக்சிஜன் வசதி போன்ற எல்லாவற்றையும் மேம்படுத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், இந்த ஊரடங்கு அர்த்தமற்றதாகிவிடும்.

இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து நம்மால் நிச்சயம் மீண்டு வர முடியும் என நம்புவோம். உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் முக்கியம். கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தை நாடு வெற்றிகொள்ள நீங்கள் வீட்டுக்குள் இருப்பது அதைவிட முக்கியம்.