Published:Updated:

இக்கணம் தேவை சிக்கனம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

இக்கணம் தேவை சிக்கனம்!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
ஊரடங்கு நடைமுறை ஏறக்குறைய முடிவுக்கு வரும் நிலையிலிருக்கிறது. விமானங்கள் பறக்கத் தயாராகிவிட்டன. இனி பஸ் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் வர வேண்டியதுதான் பாக்கி.

ஆனால், கொரோனாநோய்த் தொற்று ஊரடங்குக்கு முன்பிருந்த நிலையைவிட பலமடங்கு அதிகரித்திருக்கிறது. நம் நாட்டில் ஒரு லட்சம் கொரோனா நோயாளிகள் உருவாக 64 நாள்களாகின. ஆனால், அடுத்த 20 நாள்களில் இது இரு மடங்காகவும், அதற்கடுத்த 10 நாள்களில் மூன்று மடங்காகவும் உயர்ந்துவிடுமோ என்ற அச்சம் நம்மை வாட்டியெடுக்கிறது.

கொரோனா தொற்றுநோய் இப்படி அசுர வேகத்தில் பரவுவதை நாம் தடுக்கவில்லையென்றால், மீண்டும் ஒரு சுற்று ஊரடங்குக்கு உட்பட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படலாம். கடந்த இரண்டு மாதங்களாக ஏற்கெனவே ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், பொருளாதாரம் முடங்கிப்போய், பலருடைய வருமானம் பாதியாகக் குறைந்திருக்கிறது. பலரும் திடீரென வேலையை இழந்திருக்கிறார்கள். இந்த நிலையில், மீண்டுமொரு சுற்று ஊரடங்கு நடைமுறைக்கு வந்தால், அந்தக் கடினமான காலத்தை நாம் எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கப் போகிறோம்?!

இந்த நிலையில், நம்மில் ஒவ்வொருவரும் தனிநபர் நிதி நிர்வாகம் தொடர்பான சில முக்கியமான விஷயங்களை மனதில்கொண்டு செயல்பட வேண்டும். அவை என்னென்ன?

‘இதுதான் கடைசிச் சம்பளம்’ என்று சொல்லித் தரப்படும் சம்பளத்தை நாம் எந்த அளவுக்குச் சிக்கனமாக செலவு செய்வோமோ, அதுபோல இனி ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் சம்பளத்தைச் செலவழிக்க வேண்டும். கெளரவத்துக்கோ, டாம்பீகத்துக்கோ செலவு செய்யும் காலமல்ல இது என்பதை உணர்ந்து, எளிமையைப் பின்பற்ற வேண்டும். இந்த நேரத்தில் கடன் வாங்காமல் காலத்தை ஓட்டும் திறமையும் பொறுமையும் வேண்டும்.

‘எல்லோரும் இப்படிச் சிக்கனமாக இருந்துவிட்டால், பொருளாதாரம் எப்படி உயரும்?’ என்று கேட்கலாம். பொருளாதாரத்தை உயர்த்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் வேலை. இப்போதிருக்கும் நிலைமையில், நம்மைக் காப்பாற்றிக்கொள்வதுதான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். தகுதியுள்ள அனைவருமே தங்களால் முடிந்த அளவு கடினமாக உழைப்பதுடன், சிக்கனமான வாழ்க்கையை நடத்தினால் அடுத்த சில ஆண்டுகளில் நம் எல்லோரிடமும் நிறைய பணம் இருக்கும். அப்போது செலவு செய்தால் நமக்கு எந்தப் பாதகமும் ஏற்படாது! `ஆடம்பரத்துக்கான காலம் முடிந்துவிட்டது; இனி எல்லா விஷயங்களிலும் சிக்கனமாக இருந்தால் எதிர்காலம் நமக்கானதாக இருக்கும்’ என்பதை அறிந்து நடக்க வேண்டிய தருணம் இது!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism