Published:Updated:

வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால்...

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால்...

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
‘‘நமது பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்றால் பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டாலும், பொருளாதாரக் குறியீடுகள் நாம் வேகமான வளர்ச்சி கண்டு வருவதையே காட்டுவதாக உள்ளன’’ என்று சொல்லியிருக்கிறார் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

இந்த மாதத்தின் முதல் நாளன்று வெளியான சரக்கு மற்றும் சேவை வரியானது இந்த நிதியாண்டில் இல்லாத அளவுக்கு ரூ.1.06 லட்சம் கோடியாக உயர்ந்தது. தொழில் துறை வளர்ச்சியை எடுத்துச் சொல்லும் பர்ச்சேஸ் மேனேஜர் இண்டெக்ஸ் (PMI) அக்டோபரில் 54.1 என்ற அளவை அடைந்தது. இது, செப்டம்பரில் 49.8 ஆக இருந்தது. இது, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கான வளர்ச்சி ஆகும். இதேபோல, உற்பத்தி வளர்ச்சியைச் சொல்லும் ‘காம்போசிட் இண்டெக்ஸ்’ 59 புள்ளிகளை எட்டி, கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், யு.பி.ஐ (UPI) தொழில்நுட்பத்தின் மூலம் ரூ.3.86 லட்சம் கோடியானது ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனையும் நன்கு அதிகரித்தும் வருகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவற்றையெல்லாம் பார்த்து நாம் மகிழ்ச்சி அடையலாம் என்றாலும் சில விஷயங்களைக் கவனிக்கத் தவறக்கூடாது. கடந்த ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரை நீடித்த ஊரடங்கில் வாங்க முடியாத பொருள்களையெல்லாம் மக்கள் வாங்கத் தொடங்கியதே வேகமான வளர்ச்சிக்குக் காரணம். இனிவரும் மாதங்களில் இதே வேகத்தில் வளர்ச்சி தொடருமா என்பது சந்தேகமே. மேலும், நம் நாட்டில் ஆகஸ்ட் தொடங்கி ஜனவரி வரை பண்டிகைக் காலம் என்பதால், பொருள்களுக்கான விற்பனை அதிகமாகவே இருக்கும். இந்த விற்பனை வளர்ச்சியை வைத்து, பொருளாதாரம் வேகமான வளர்ச்சி காணத் தொடங்கிவிட்டது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கொரோனா நோய்த்தொற்று இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. அது எப்போது முடியும் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில், ஐரோப்பாவில் கொரோனா இரண்டாம் அலை உருவாகி, ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் கொரோனா நோய்த்தொற்று மீண்டும் வந்து, ஊரடங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை வந்தால், பொருளாதார வளர்ச்சி பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

சாண் ஏறினால் முழம் சறுக்கல் என்கிற நிலையில், இனிவரும் பாதிப்புகளிலிருந்து நம் மக்களைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் எடுக்க வேண்டும். ‘கஷ்டகாலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி நமக்கு நல்ல காலம்தான்’ என்று அதீத நம்பிக்கை வைப்பது ஆபத்தானது. இதை உணராவிட்டால், கடினமானதொரு பாடத்தை வரலாறு நமக்கு மீண்டும் கற்றுத்தரத் தயங்காது!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism