Published:Updated:

இ-காமர்ஸ் நிறுவனங்கள்... பயப்படத் தேவையில்லை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

தீபாவளிப் பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கிறது. புதிய ஆடைகள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் எனப் பலரும் பல பொருள்களை வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக, இந்தியாவின் இருபெரும் இ-காமர்ஸ் நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் நடத்திய மாபெரும் ஆன்லைன் விற்பனை பெரும் வெற்றி கண்டுள்ளது.

2018-ல் நடந்த மாபெரும் விற்பனையில் 2.1 பில்லியன் டாலருக்கும், கடந்த 2019-ல் 2.7 பில்லியன் டாலருக்கும் விற்பனை செய்த இந்த இரு நிறுவனங்களும் இப்போது நடத்திய விற்பனையில் முதல் நான்கு நாள்களிலேயே 3.5 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமாராக ரூ.26,000 கோடி) அளவுக்கு விற்பனை செய்துள்ளன. இந்த மாபெரும் விற்பனை முடிவதற்கு மேலும் சில நாள்கள் இருப்பதால், விற்பனை மதிப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாகச் சிலர் நேரில் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கத் தயங்குகின்றனர். ஐ.டி உட்பட பல துறைசார்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலையும் செய்து வருகின்றனர். இவர்களுக்கெல்லாம் மிகவும் செளகர்யமாக இருப்பது ஆன்லைன் பர்ச்சேஸ்தான். தவிர, கொரோனா காலத்தில் வேலை இழப்பு, வருமானம் குறைவு போன்ற காரணங்களால் புதிய பொருள்களை வாங்க முடியாதவர்கள் ஆன்லைனில் இ.எம்.ஐ மூலம் வாங்கியிருப்பதும் இந்த விற்பனை உயர்வுக்கு ஒரு காரணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆன்லைனில் ரூ.26,000 கோடிக்கு விற்பனை என்பது மிகப்பெரிய வளர்ச்சி என்றாலும், இந்த அசுர வளர்ச்சியைப் பார்த்து, பொருள்களை நேரடியாக விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்கள் பயப்படத் தேவையில்லை. தரம் நிறைந்த பொருள், மனம் நிறைந்த சேவை, சரியான விலை என்ற அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, தேடிவரும் வாடிக்கையாளர்கள் திருப்தியுடன் திரும்பிச் செல்கிற மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பதன்மூலம் நிலைத்து நிற்க முடியும். அதே நேரம், ஆன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தளவுக்கு விற்பனையை அதிகரிக்க முடியும் என்ற நோக்கில் சிந்திப்பதும் அவசியம். இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைனில் மட்டுமே வியாபாரம் செய்துகொண்டிருக்க, நேரடி விற்பனை நிறுவனங்கள் நேரடி விற்பனை, ஆன்லைன்மூலம் விற்பனை என இரு வாய்ப்புகளையும் திறம்பட செய்து ஜெயிக்க முடியும்.

நம் வசதிக்கேற்ப சூழலை மாற்ற வேண்டும் என்று நினைப்பதைவிட, சூழலுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வதன்மூலமே பிசினஸில் ஜெயிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டால், ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களின் போட்டியை நேரடி விற்பனை நிறுவனங்களால் நிச்சயம் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை!

- ஆசிரியர்