Published:Updated:

தீபாவளித் திருநாளில் புதிதாக முதலீடு செய்வோம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

தீபாவளியின் வருகைக்காக நாம் மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம். தொழில் செய்பவர்களும் முதலீட்டாளர்களும் இந்த நன்னாளில்தான் புதிதாகக் கணக்கு தொடங்கி, புதிய முதலீட்டை மேற்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

வரும் சனிக்கிழமை தீபாவளி அன்று மாலை முகூர்த் சிறப்பு வர்த்தகம் நடக்கவிருக்கிறது. இந்தச் சிறப்பு வர்த்தகத்தில் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் பலரும் ஒரு சில பங்குகளை வாங்குவதுபோல நாமும் வாங்கலாம். பெரிய அளவில் முதலீடு செய்வதற்கான தினமாக நாம் இதைக் கருதத் தேவையில்லை. காரணம், பங்குச் சந்தையானது கடந்த சில நாள்களாகவே வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தினம்தினம் தொட்டுக்கொண்டிருக்கிறது. கோவிட்-19 பாதிப்பு நீடிக்கும் சூழலில், உலகப் பொருளாதாரமும் சரி, நம் நாட்டின் பொருளாதாரமும் சரி, பெரிய அளவில் பாதிப்படைந்திருக்கிறது. இதிலிருந்து மீண்டெழுவதற்காக உலகமே போராடிவரும் நிலையில், இந்தியப் பங்குச் சந்தையின் இந்த ஏற்றம் நமக்குள் ஆச்சர்யத்தையும் கூடவே சந்தேகத்தையும் எழுப்பவே செய்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தற்போது, பங்குச் சந்தை வேகமான வளர்ச்சி அடையக் காரணம், வெளிநாட்டு முதலீடு அதிக அளவில் நம் நாட்டைத் தேடி வருவதுதான். அந்த முதலீடு உலகின் வேறு பல நாடுகளை நோக்கிச் செல்லாமல், நம் நாட்டைத் தேடிவரக் காரணம், வளர்ச்சிக்கான வாய்ப்பு உலகின் வேறெந்த நாட்டையும்விட இங்கு அதிகம் என வெளிநாட்டவர்கள் நினைப்பதுதான். நம் நாட்டின் வளர்ச்சி பற்றி வெளி நாட்டவர்களுக்கு இருக்கும் கணிப்பும் நம்பிக்கையும் நமக்கும் இருக்க வேண்டும்.

அதே நேரம் இன்று உச்சத்தில் இருக்கும் பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்லும் என புத்திசாலி முதலீட்டாளர்கள் யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். சந்தையின் போக்கில் ஏற்ற இறக்கம் சகஜம் என்பது அவர்களுக்கு நன்குத் தெரியும். சந்தை இப்போதுள்ள நிலையிலிருந்து இறங்கினாலும், 2008-ல் ஏற்பட்டதுபோல, பெரும் இறக்கம் காண வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து. எனவே, தற்போது நம் கையிலுள்ள எல்லாப் பணத்தையும் முதலீடு செய்வதைவிட, இப்போது கொஞ்சம் முதலீடு செய்துவிட்டு, சந்தை கொஞ்சம் இறங்கியபின் மீண்டும் கொஞ்சம் பணத்தை முதலீடு செய்வதே சரி.

கடந்த காலத்தில் சந்தை இறங்கியதால் நமக்கு வந்த நஷ்டத்தைவிட, முதலீடு எதுவும் செய்யாமல் சந்தையைவிட்டு ஒதுங்கிநின்றதால் ஏற்பட்ட நஷ்டம் அதிகம் என்பதைப் பலரும் புரிந்துகொள்வதே இல்லை. பங்குச் சந்தையில் குறுகிய காலத்தில் நஷ்டம் வந்தாலும், நீண்டகாலத்தில் மற்ற எல்லா சொத்துகளையும்விட அதிக வருமானம் தந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், எல்லோரும் சிறிதளவு தொகையையாவது அதில் முதலீடு செய்யத் தயங்கவே மாட்டார்கள். இந்த உண்மையை உணர்ந்து இந்தத் தீபாவளி முதலே நாமும் முதலீடு செய்யத் தேவையான வழிமுறைகளைக் கண்டறிய முற்படுவோம்!

- ஆசிரியர்