Published:Updated:

வங்கிகள் மீது சந்தேகம் வரக்கூடாது!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஆர்.பி.ஐ அறிவித்த கடன் சலுகைக் காலத்தால் வங்கித்துறை குறிப்பிடத்தகுந்த அளவு லாப இழப்பையும் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், சிறிய அளவில் இருக்கும் தனியார் வங்கிகளில் தினம் ஒரு சர்ச்சை கிளம்பி, அதில் டெபாசிட் செய்திருக்கும் மக்களின் அடிவயிற்றைக் கலக்கிவருகிறது.

நமது மாநிலத்தைச் சேர்ந்த தனியார் வங்கியான லக்ஷ்மி விலாஸ் பேங்க்கில் முறைகேடு நடந்திருப்பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் தலைவர் - நிர்வாக இயக்குநரைப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என 60% முதலீட்டாளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்த வங்கி குறித்த சர்ச்சை அடங்குவதற்குள், கேரளாவைச் சேர்ந்த தனியார் வங்கியான தனலட்சுமி பேங்கின் தலைவர் - நிர்வாக இயக்கநராகத் தற்போது இருப்பவர் மேற்கொண்டு பொறுப்பில் இருக்கக் கூடாது என 90% முதலீட்டாளர்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள். இந்த இரு வங்கிகளிலும் நடந்த சர்ச்சைகள் அம்பலத்துக்கு வந்ததைப் பார்த்த பின், பிற சிறிய தனியார் வங்கிகளிலும் இதுமாதிரியான சர்ச்சைகள் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறதோ என்ற சந்தேகம் வரவே செய்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நம் நாட்டில் இருக்கும் எல்லா வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றாலும், தனியார் வங்கிகளுக்கென இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிலபல வேலைகளை ‘ரகசியமாக’ செய்துகொண்டுதான் இருக்கின்றன. கடந்த காலத்தில் மிகவும் தேவைப்பட்டவர்களுக்கு கடனை அள்ளி வழங்கியதால், இந்த வங்கிகளின் வாராக்கடன் ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது. முன்புபோல இல்லாமல், கடன் நிலவரங்களையும் வாராக்கடன் தொடர்பான விவரங்களையும் தந்தே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதால், சிறிய வங்கிகளின் தகிடுதத்தங்கள் வெட்டவெளிச்சமாவது தற்போது தவிர்க்க முடியாத நிகழ்வாக இருக்கிறது.

நூற்றாண்டை நெருங்கும் பாரம்பர்யமிக்க இந்த வங்கிகள் அந்தந்தப் பகுதி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த பெரும்பங்கு வகித்துள்ளன. இதனால்தான் இந்த வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாயை மக்கள் டெபாசிட் செய்துள்ளனர். இந்தப் பணத்துக்கு உடனடியாகப் பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், இனிவரும் நாள்களிலும் எந்தப் பங்கமும் வந்துவிடாதபடிக்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். இந்த வங்கிகளில் இனியும் முறைகேடுகள் நடக்காதபடிக்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையானது என்றும் கேள்விக்கு உள்ளாகக் கூடாது. ஒரு வங்கி மீது மக்களுக்கு சந்தேகம் வந்தாலும், அதன் பாதிப்பு எல்லா வங்கிகள் மீதும் எதிரொலித்து, பொருளாதாரமே சீர்குலையும் நிலை ஏற்படும். அந்த அபாயம் ஏற்பட நம் மத்திய அரசு எந்த வகையிலும் இடம்தந்துவிடக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

- ஆசிரியர்