Published:Updated:

சம்பாதிப்பது சாப்பாட்டுக்கே சரியாகப் போனால்..?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

ம்மூர் ஏழைகளை கொரோனா தொற்றுநோய் ஒருபக்கம் பாடாய்ப்படுத்துகிறது என்றால், அத்தியாவசியமான பொருள்களின் விலைவாசி உயர்வு இன்னொரு பக்கம் முழிபிதுங்க வைக்கிறது. கடந்த சில மாதங்களாகத் தொடர் ஏற்றத்தில் இருந்துவரும் விலைவாசி உயர்வு எங்கு போய் முடியும் என்று தெரியாமல் தவிக்கிறார்கள் மக்கள்.

பணவீக்கம் அல்லது விலைவாசியின் போக்கை எடுத்துச் சொல்ல இரண்டு குறியீடுகள் மத்திய அரசின் புள்ளிவிவரத் துறையால் வெளியிடப்படுகிறது. மொத்த விலைப் பணவீக்கம் என்பது பொருள்களின் மொத்த விலைப் போக்கைச் சொல்லும். நுகர்வோர் பணவீக்கம் என்பது ஒரு பொருளைப் பயனாளர் வாங்கும்போது உள்ள விலைப்போக்கைக் குறிக்கும். நுகர்வோர் பணவீக்க விகிதம் அதிகபட்சம் 6 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும் என்பது ஆர்.பி.ஐ-யின் எதிர்பார்ப்பு. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக நுகர்வோர் பணவீக்க விகிதம் தொடர்ந்து 6 சதவிகிதத்துக்குமேல் உயர்ந்து, கடந்த செப்டம்பரில் 7.34 என்ற அபாய அளவை எட்டியிருக்கிறது.

இந்த இரண்டு குறியீடுகளிலும் இரும்பு உட்பட பல பொருள்கள் இருந்தாலும், உணவுப் பொருள்களுக்கு கணிசமான இடம் உள்ளது. நுகர்வோர் பணவீக்க விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்ததைவிட (3.84%) கடந்த செப்டம்பரில் இரண்டு மடங்கு (8.17%) உயர்ந்துள்ளது. இந்தக் குறியீட்டின்படி, காய்கறிகளின் விலை கடந்த ஆகஸ்ட்டில் 7.03 சதவிகிதமாக இருந்தது, செப்டம்பரில் ஐந்து மடங்கு (36.54%) உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு விலையும் தக்காளி விலையும் ஏகத்துக்கும் உயர்ந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்? கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிக மழை பெய்திருப்பதால், சாகுபடி கொஞ்சம் குறைய வாய்ப்புண்டு. கடந்த சில மாதங்களாகவே சில மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதும் விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. என்ன காரணமாக இருந்தாலும், இன்னும் எத்தனை மாதங்களுக்கு இந்த விலைவாசி உயர்வு இப்படியே இருக்கும், இதற்கொரு தீர்வே இல்லையா என்பதே சாதாரண மனிதர்கள் கேட்கும் கேள்வி.

கொரோனாவுக்குப் பிறகு, கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வருமானம் பாதியாகக் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் சம்பாதிப்பது அனைத்தும் சாப்பாட்டுக்கே போனால், எதிர்கால வாழ்க்கைக்கு எப்படிச் சேமிப்பார்கள், மற்ற அத்தியாவசிய செலவுகளை என்ன செய்து சமாளிப்பார்கள்?

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் மட்டும் இந்தப் பிரச்னைக்கு வழிபிறந்துவிடாது. இது மக்களின் உணவுப் பிரச்னை. இந்தச் செலவை யாராலும் தவிர்க்க முடியாது. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் உடனே தலையிட்டு, விலைவாசி உயர்வைக் குறைக்க வழி செய்ய வேண்டும்!

- ஆசிரியர்