பிரீமியம் ஸ்டோரி
டந்த வாரத்தில் வெளியான இரு புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே நம்மை கவலையடையச் செய்துள்ளன. முதல் புள்ளிவிவரம், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் நமது ஜி.டி.பி வளர்ச்சி மைனஸ் 23.9% ஆக இருப்பது, இரண்டாவது புள்ளிவிவரம், நம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 8 சதவிகிதத்துக்குமேல் சென்றிருப்பது.

கோவிட்-19 தொற்றுநோய் பரவாமல் இருக்க ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தியதால் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து, பொருளாதார வளர்ச்சி இறக்கம் கண்டது. உலகின் பல நாடுகளிலும் இதேபோன்று புள்ளிவிவரங்கள் வெளியானாலும், நம் பொருளாதாரம் மட்டும் மிக அதிகமான சரிவைக் கண்டுள்ளது. ஏற்கெனவே மோசமாக இருந்த பொருளாதார நிலையை, கோவிட் தொற்று மேலும் மோசமாக்கிவிட்டது.

இதேபோல, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் அதிகரித்துவந்த வேலைவாய்ப்பு ஆகஸ்ட் மாதத்தில் கொஞ்சம் குறைந்து, வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. அதாவது, வேலைவாய்ப்பின்மை 8.4% என்ற அளவுக்கு அதிகரித்்திருப்பதாக சி.எம்.ஐ.இ தெரிவித்திருக்கிறது. பயிர் சாகுபடி எல்லாப் பகுதிகளிலும் முடிந்திருப்பதால், அந்த வேலையைச் செய்தவர்கள் வேறு வேலையைத் தேட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். இதனால் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை தற்போது 3.2 கோடியிலிருந்து 3.6 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இந்த இரு பிரச்னைகளுமே கூடுதல் கவனத்துடன் தீர்க்கப்பட வேண்டியவை. ஆனால், மத்திய அரசாங்கமோ இந்தப் பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்தபாடில்லை. ‘கடவுளின் செயல்’ என்று சொல்லி, தனது கடமையிலிருந்து தப்பிக்கப்பார்க்கிறது. கொரோனா வரும்முன்பே நம் பொருளாதாரம் சுணங்கத் தொடங்கியதுக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பதில் சொல்ல மத்திய அரசாங்கம் தயாரில்லை. இப்போது வேலைவாய்ப்புகள் குறைந்ததுக்கு யார் மீது பழியைப் போடப்போகிறதோ!

பொருளாதார வளர்ச்சியை எப்படிக் கொண்டு வர வேண்டும் என்பது பற்றிய மத்திய அரசாங்கம் யாருடனும் கலந்தாலோசிப்பதில்லை என்பதுதான் பலரது குற்றச்சாட்டு. இனியாவது தங்கள் நடத்தையை மாற்றிக்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து யோசனைகளையும் எல்லோரிடமிருந்தும் கேட்டுப் பெற வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிப்பதை தனது முதல் வேலையாகக் கருதிச் செயல்பட வேண்டும்.

‘எல்லாம் எங்களுக்குத் தெரியும்’ என்கிற ரீதியில் செயல்படுபவர்கள், கடவுள்மீது பழியைப் போடாமல், அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு