Published:Updated:

வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

‘‘இதற்கு முன் நாம் கணித்ததைவிட நம் பொருளாதாரம் வேகமாக மீண்டு வரும் என்றே படுகிறது’’ என்று சொல்லியிருக்கிறார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைவர் கே.வி.காமத். பிரதமரின் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், ‘‘ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் நமது பொருளாதாரம் ‘V’ வடிவில் வளர்ச்சியைக் கண்டுவருகிறது. அதாவது, விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து வருவதைப் பார்க்க முடிகிறது’’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், உண்மையில் நம் பொருளாதாரம் அத்தகைய வளர்ச்சியைக் கண்டு வருகிறதா என்பதுதான் நாம் அனைவரும் கேட்கும் கேள்வி. காரணம், மேலே பார்த்த வகையில் சிலர் கருத்துகளைச் சொல்லி வந்தாலும், பொருளாதார வளர்ச்சி குறித்த அபயக்குரல் எழுப்புபவர்களையும் நாம் கவனிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நமது ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன், ‘‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது ‘அச்சத்துக்குள்ளாக்கும்’ வகையில் இருப்பதாகவும் இந்த வளர்ச்சியைப் பார்த்து மத்திய அரசாங்கம் பெருமைப்பட்டுக்கொண்டு சும்மா இருந்துவிடக் கூடாது’’ என்று சொல்லியிருக்கிறார். நமது ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவராக இருந்த உர்ஜித் பட்டேல், துணைத் தலைவராக விரால் ஆச்சார்யா, புள்ளிவிவரத் துறையின் தலைவராக இருந்த பிரணாப் சென் உட்படப் பலரும் நமது பொருளாதார வளர்ச்சியானது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முன்னேற்றம் காணவில்லை என்பதை ஆணித்தரமாகச் சொல்லி வருகிறார்கள்.

நமது பொருளாதார வளர்ச்சி குறித்து நிபுணர்கள் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும்; தனியார் அலுவலகங்களில் வேலைபார்க்கும் சம்பளதாரர்கள் மற்றும் கூலி வேலையை மட்டுமே நம்பி வேலைபார்ப்பவர்களின் நிலைமை இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தாலே நம் பொருளாதாரத்தின் நிலை தெளிவாகப் புரியும். காரணம், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பும் வர்த்தக நிறுவனங்களின் வருமானம் பெருகியபாடில்லை. அன்றாடம் தேவைப்படும் உணவுப் பொருள்களை வாங்கவே சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதி தீர்ந்துவிடும்போது, வேறு பொருள்களை வாங்கும் நிலையில் பலரும் இல்லை. சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் மனிதர்கள் செலவு செய்யும் அளவுக்கு முன்னேற்றம் கண்டால்தானே, பொருளாதார வளர்ச்சி மீண்டும் திரும்பிவிட்டது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட அறிகுறி எதுவும் தென்படாதபோது பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி காணத் தொடங்கிவிட்டது என்று சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்?

பல்வேறு சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் இடையில்தான் மத்திய அரசாங்கம் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எனினும், இனிவரும் காலத்திலாவது மக்கள் கையில் அதிகம் பணம் புழங்குகிற அளவுக்கான வளர்ச்சியை மத்திய அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்பதே சாதாரண மனிதர்கள் முன்வைக்கும் வேண்டுகோள்!

- ஆசிரியர்