Published:Updated:

முத்ரா கடன் முக்கியம் என்று உணர்ந்து செயல்படுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

எம்.எஸ்.எம்.இ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் முத்ரா கடனில் ஏறக்குறையை 5% கடன் தொகை, வாராக்கடனாக மாறியிருப்பதாக மத்திய இணை நிதி அமைச்சர் அனுராக் தாகூர் சொல்லியிருப்பது நமக்கு கவலை தருவதாகவே இருக்கிறது.

2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கடனை பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் மூலம் இதுவரை 25.3 கோடி பேருக்கு மொத்தம் ரூ.12.9 லட்சம் கோடி கடனாக அளிக்கப்பட்டிருக்கிறது. 2017-18-ம் ஆண்டில் ரூ.7,277 கோடியாக இருந்த முத்ரா வாராக்கடன், 2019-20-ல் ரூ.18,836 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஆனால், இந்த நிதி ஆண்டில்தான் கொரோனா நோயின் தாக்கம் கடுமையாக இருந்திருக்கிறது. எனவே, இந்த நிதி ஆண்டின் முடிவில் முத்ரா வாராக்கடன் இன்னும் கணிசமாக உயரும் என்றே எதிர்பார்க்கலாம்.

பொதுவாக, ஏதாவது ஒரு சொத்தை அடமானம் வைத்தே கடன் தரப்படுகிறது. ஆனால், முத்ரா கடன்கள் எந்தச் சொத்தையும் அடமானம் வைக்காமலே தரப்படுகிறது. முத்ரா கடன் வாங்கும் சிறு தொழில் நிறுவனம் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல்போனால், அந்தக் கடன் முழுவதையும் வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜனதா, காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் கட்சியை வளர்ப்பதற்காகக் கண்டவர்களுக்கும் வங்கிக் கடன்கள் அள்ளிவிடப்பட்டன. அதேபோலத்தான் தற்போது முத்ரா கடனும் பிஜே.பி கட்சியை வளர்ப்பதற்காக அள்ளிவிடப்படுகிறது என்கிற குற்றச்சாட்டுகள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இப்படி சுயஅரசியல் லாபங்களுக்காக மக்கள் பணத்தை, கடன் என்கிற பெயரில் கண்டவர்களுக்கும் அள்ளிவிடுவது ஆபத்தானது. இந்நிலை, தொடர்ந்தால் வாராக்கடன் என்பதை ஒருநாளும் ஒழிக்கவே முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, வாராக்கடன் சிக்கலில் சிக்கியிருக்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வேறு என்னென்ன பிரச்னைகள் உள்ளன, இந்தப் பிரச்னைகளை சரிசெய்வதால் இன்னும் அவர்களால் சிறப்பாகச் செயல்பட்டு, லாபம் சம்பாதித்து வங்கிகளின் கடனைத் திரும்பத் தரமுடியுமா என்று ஆராய்ந்து, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும்.

முன்பு, கல்விக் கடனை கேட்டவர்களுக்கெல்லாம் தந்ததால்தான் அதில் வாராக் கடன் அதிகரித்து, தற்போது அதற்கென ஓர் இணையதளம் உருவாக்கப்பட்டு, தேவைப்படுகிறவர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. அதுபோல, முத்ரா கடனும் யாருக்குத் தேவையோ, அவருக்கு மட்டும் தேவைப்படும் அளவுக்கு மட்டும் வங்கிகள் கடன் தர வேண்டும். இல்லாவிட்டால், முத்ரா (வாராக்) கடன் மத்திய அரசுக்கு கெட்ட பெயரையே உருவாக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

- ஆசிரியர்