Published:Updated:

மத்திய அரசு பரிவுடன் நடந்துகொள்ளட்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

‘‘வங்கிகளில் வாங்கிய கடனைக் கட்டச் சொல்லி சாதாரண மக்களைத் துன்புறுத்துவது ஏன்? இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்க முடியாதா? ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி அதன்பின்னால் ஒளிந்துகொள்வது ஏன்?’’ என்று மத்திய அரசாங்கத்தைப் பார்த்து கேள்வி கேட்டிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்த சில நாள்களில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ். ‘வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணையை ஆறு மாதங்களுக்குக் கட்ட வேண்டாம்’ என்ற சலுகையை அளித்த அவர், வட்டி கட்டாமல் இருக்கும் சலுகை பற்றி வாயைத் திறக்கவில்லை.  

இந்த நிலையில், ஆர்.பி.ஐ உத்தரவை மீறி சில வங்கிகள் வட்டி வசூலித்து வருவதாகவும், அப்படி வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், இது தொடர்பாகக் கடந்த ஜூன் 4-ம் தேதி அன்றே நிதி அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டது உச்ச நீதிமன்றம். ‘‘ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கிகள் வட்டி கொடுத்துவரும் நிலையில் கடனுக்கான வட்டியை ரத்து செய்வது வங்கித் துறைக்குச் சிக்கலை ஏற்படுத்தும்’’ என ரிசர்வ் வங்கிதான் விளக்கம் தந்ததே தவிர, நிதி அமைச்சகமோ, மத்திய அரசாங்கமோ இது பற்றி இதுவரை வாயைத் திறக்கவில்லை. உச்ச நீதிமன்றம் திரும்பத் திரும்பக் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்தான், ‘‘இந்தப் பிரச்னையில் இன்னும் ஒரு வார காலத்தில் மத்திய அரசு தனது முடிவை நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்’’ என்று கறாராகச் சொல்லியிருக்கிறது.

இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் கொஞ்சம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். ‘கடன் தவணைகள் ஏற்கெனவே தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், வட்டியை ரத்து செய்தால், வங்கிகளின் பாடு திண்டாட்டமாகிவிடுமே’ என மத்திய அரசாங்கம் கவலைப்படுவதில் நியாயம் இருக்கலாம். ஆனால், கட்டாத தவணைக்கும் சேர்த்து வட்டி போடுவது எந்த வகையில் நியாயம்? இதனால் கடனுக்கான தவணைக் காலம் மேலும் பல மாதங்கள் அதிகரிக்கிற  கொடுமையைக் கடன்தாரர்கள் அனுபவிக்கத்தான் வேண்டுமா?

எனவே, தவணை தள்ளிவைப்புக் காலத்தில் வட்டி போடுவது கூடாது என்ற உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் மத்திய அரசாங்கம் பிறப்பிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், கொரோனாவால் துவண்டுபோயிருக்கும் கடன்தாரர்கள் இன்னும் கடும் துயரத்துக்கு ஆளாவார்கள் என்பதில் சந்தேகமில்லை!

- ஆசிரியர்