Published:Updated:

தனியார் மயப்படுத்தினால் பிரச்னை தீர்ந்துவிடுமா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

இணைப்பு நடவடிக்கையில் இடம்பெறாத பொதுத்துறை வங்கிகள் தனியார் மயப்படுத்தப்படும் என சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்த வங்கிகள் எவையெவை என்கிற தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் தனியார் மயப்படுத்தப்படும் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வங்கிகளில் எவை முதலில் தனியார் மயப்படுத்தப்படும், இந்த வங்கிகளில் அரசுக்கு இருக்கும் அத்தனை பங்குகளும் விற்கப்படுமா அல்லது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அளவுக்கு மட்டுமே விற்கப்படுமா என்பது ரகசியமாகவே இருக்கிறது.

இந்த நான்கு வங்கிகளின் வாராக்கடன் அதிகமாக உள்ள நிலையில், இந்த வங்கிகளைத் தனியார் மயப்படுத்துவது தவிர, வேறு வழி அரசுக்கு இல்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஒரு முக்கியமான கேள்வி நமக்குள் எழவே செய்கிறது. இந்த நான்கு வங்கிகளிலும் வாராக்கடன் இவ்வளவு தூரம் உயர யார் காரணம், அவர்கள் மீது நடந்த விசாரணை என்ன, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதே அந்தக் கேள்வி.

அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 15 ஆண்டுகளில் நடந்த குளறுபடிகளுக்கு யார் காரணம் என எந்த விசாரணையும் நடந்ததாகத் தெரியவில்லை. டெல்லியில் மிகவும் செல்வாக்குள்ள அரசியல்வாதியின் மகன் செய்த தலையீடுதான் இந்த வங்கியின் வாராக்கடன் பிரச்னைக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டாலும் இதற்காக அவர் விசாரிக்கப் படவில்லை. வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த வங்கியின் தலைமைப் பொறுப்பை வகித்தபோது, தகுதியற்ற பலருக்கும் கடன் கொடுத்ததுடன், தவறான பல முடிவுகளையும் எடுத்தது, இந்த வங்கியின் எதிர்காலத்தையே நிலைகுலையச் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

இவர்களை எல்லாம் விசாரிக்காமல், இந்த வங்கிகளைத் தனியார் மயப்படுத்தினால் பிரச்னை தீர்ந்துவிடுமா? இப்போது நல்ல நிலையில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களிலும் சில கயவர்கள் கபளீகரம் செய்தால், அதையும் விசாரணை இல்லாமல் ஏற்றுக்கொள்வோமா? வங்கியோ, உற்பத்தி நிறுவனமோ, அரசுக்குச் சொந்தமான அனைத்து நிறுவனங்களுக்கும் ஆதாரமாக இருப்பது மக்களின் வரிப்பணம்தான். மக்களின் பணம் இப்படிக் கொள்ளை போவதை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?

மக்களுக்குச் சேவை செய்வதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்துத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை, இந்தத் தவறுகளுக்குக் காரணமானவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் காட்ட வேண்டாமா? அப்படிக் காட்டினால்தானே இதுபோன்ற தவறுகளை நடக்காமல் தடுக்க முடியும். மத்திய அரசாங்கம் இந்த ரீதியில் செயல்படாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

- ஆசிரியர்