Published:Updated:

அன்பு வணக்கம்!

ஆசிரியர் பக்கம்

ஏன் இந்த விலை ஏற்றம்?

அன்பு வணக்கம்!

ஏன் இந்த விலை ஏற்றம்?

Published:Updated:
ஆசிரியர் பக்கம்

தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என பண்டிகைகளின் படையெடுப்பு நிகழவிருக்கிறது. கார் பைக்குகள் விற்பனை மேலும் சூடு பிடிக்கப் போகிறது. ஆனால், இந்த நேரத்தில் `மக்கள் கார்’ என்று பரவலாகக் கருதப்படும் மாருதி சுஸூகியின் ஆல்ட்டோ K10 போன்ற வாகனங்களின் விலை எல்லாம்கூட ஆறு லட்சம் ஏழு லட்சம் என்று ஏறியிருக்கிறது. மற்ற கார் கம்பெனிகளின் விலை நிலவரமும் இதேபோல ஏற்றம் கண்டிருக்கின்றன. ஏன் இந்த விலை ஏற்றம்?

கார்களுக்கான டிமாண்ட் அதிகமாகிக் கொண்டே போகிறது. கடந்த ஜுலை மாதம் மட்டும் 2,93,865 கார்கள் விற்பனையானது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அதாவது கொரோனா காலத்திற்கு முந்தைய காலத்தில்கூட இந்த அளவுக்கு கார்களின் விற்பனை இருந்ததில்லை. இத்தனை கார்கள் விற்பனையானாலும், விரும்பிய கார்களை வாங்க முடியாமல் அதற்கு முன்பதிவு செய்துவிட்டுக் காத்திக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கிறது. கார்களுக்கான டிமாண்ட் இப்படி அதிகமாகிக் கொண்டே போவதுதான், கார்களின் விலை ஏற்றத்துக்குக் காரணமா?

இதற்கு கார் உற்பத்தியாளர்கள் சொல்லும் காரணங்களில் உண்மையில்லாமல் இல்லை. கார்களுக்கான உதிரிபாகங்களின் விலை ஏறிவிட்டது. இன்னொருபுறம், காற்றின் மாசைக் கட்டுப்படுத்த BS-6 விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால், காரின் உற்பத்திச் செலவு கூடிவிட்டது. கூடவே AIRBAG, ABS எல்லாம் கட்டாயம் என்று அரசு பல கட்டுப்பாடுகளைப் புகுத்திவிட்டது. 5G கூப்பிடு தூரத்தில் வந்துவிட்டதால், பல கனெக்டட் கார் தொழில்நுட்பங்களை காருக்கு ஸ்டாண்டர்டாகக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். இதுவும் காரின் விலை ஏற்றத்துக்குக் காரணம். இதுதவிர - சாலை வரி, பதிவுக் கட்டணம், காப்பீட்டுத் தொகை ஆகியவையும் உயர்ந்துவிட்டன. இதெல்லாம்தான் காரின் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்று அங்கலாய்க்கிறார்கள். இன்னொருபுறம், உலக அளவில் மைக்ரோ ப்ராசஸர்களுக்குத் தட்டுப்பாடும் இருப்பதால், காத்திருப்புக் காலமும் அதிகமாகியிருக்கிறது. எரிபொருள் விலை ஏற்றம் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

இப்படிப் பல சவால்களை எதிர்கொண்டாலும், கார்களின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. சிக்கனமாக கார் தயாரிக்கும் நுட்பம் தெரிந்தவர்கள் நாம். இந்தப் பிரச்சனைகளுக்கும் சீக்கிரமே தீர்வுகளைக் கண்டு, கார்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் முயற்சி எடுக்க வேண்டும்.

- ஆசிரியர்