Published:Updated:

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே! - அன்பு வணக்கம்!

ஆசிரியர் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசிரியர் பக்கம்

ஆசிரியர் பக்கம்

ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஆண்டு கார்/பைக்குகளின் அறிமுகம் அதிக எண்ணிக்கையில் நடக்கவில்லை என்றாலும், அவர்களின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் அளவுக்கு நடைபெற்றன. கொரோனாவின் இரண்டாவது அலை, அதன் தொடர்ச்சியாக வந்த ஊரடங்கு, மைக்ரோ சிப் தட்டுப்பாடு போன்ற சவால்களை எல்லாம் மீறி, இந்த அளவுக்குப் புது புது கார்களும் பைக்குகளும் அறிமுகமானதே ஒரு சாதனை என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த ஆண்டின் சிறந்த காராக XUV 700 அதிகப் போட்டியில்லாமல் தேர்வானது என்றாலும் - கட்டுப்படியாகக்கூடிய விலை, அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பம், உலகத்தரமான பாதுகாப்பு என்று பல விஷயங்களில் XUV 700 உடன் பல கார்கள் போட்டி போட்டன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

கார்களைவிட பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் அறிமுகங்கள் இந்த ஆண்டு வழக்கத்தைவிடவும் சுறுசுறுப்பாக நடைபெற்றன. அதிலும் டிவிஎஸ் குறுகிய காலகட்டத்தில் அடுத்தடுத்து மூன்று அறிமுகங்களை நிகழ்த்தியது. இந்த ஆண்டின் சிறந்த பைக்குகளாக யமஹா R15V4/R15M தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல, இந்த ஆண்டின் சிறந்த ஸ்கூட்டராக டிவிஎஸ் ஜூபிட்டர் 125 தேர்வாகியிருக்கிறது.

இந்த ஆண்டின் சிறந்த, பைக், ஸ்கூட்டர்கள் ஆகியவற்றைத் தேர்வு செய்ய வாசகர்களாகிய நீங்கள் எங்களை முந்திக்கொண்டு கொடுத்த பங்களிப்புகள் எங்களின் வேலையை இலகுவாக்கியது. அதற்கு உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஏத்தர் மற்றும் ஓலா ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தொழிற்சாலைகள் தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், இப்போது டிவிஎஸ் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க புதிதாக ஒரு தொழிற்சாலையை நிறுவ இருப்பதாக அறிவித்திருக்கிறது. க்ரீவ்ஸ் குழுமத்தின் ஆம்பியர் நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனத் துறையில் தமிழ்நாட்டில் 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்திருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக நாம் தமிழ்நாட்டில் உருவாக்கும் சூழல், உலகப் புகழ்பெற்ற மின்சார கார் உற்பத்தியாளர்களையும் தமிழகம் நோக்கிக் கவர்ந்திழுத்து வரட்டும்.

ஆசிரியர்