பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பொருளாதாரத்துக்கு முன்னுரிமை கொடுங்கள்!

ஹலோ வாசகர்களே..!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

`அரசியல்வாதிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் நலனை முன்னிறுத்திச் சண்டையிடும் சாதாரண மனிதர்களே...’ என்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நிரூபித்திருக்கிறார்கள்.

``தற்போதிருக்கும் பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம், காங்கிரஸ் தலைமையும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனும் செய்த தவறுகளே...’’ என்று நிர்மலா சீதாராமன் திரியைக் கொளுத்திப்போட்டார். ``எங்கள் ஆட்சியில் சில தவறுகள் நடந்திருக்கலாம். கடந்த ஐந்தரை ஆண்டுக்காலமாக ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் நீங்கள் அவற்றைச் சரிசெய்யாமல், எங்களைக் குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கிறீர்களே...’’ என்று மன்மோகன் சிங் ஆதங்கப்பட்டார். `‘காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களெல்லாம் நாட்டுக்கே தெரியுமே...’’ என்று நிதி அமைச்சர் பதில் சொல்லி, வாக்குவாதத்தை மேலும் உக்கிரமாக்கியிருக்கிறார்.

அரசியல்வாதிகள், தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் கொள்கையின் அடிப்படையில் கருத்துகளைப் பொதுவெளியில் முன்வைப்பது தவறில்லை; தங்கள் கருத்துகளைப் பொதுமக்களுக்கு நயமாக எடுத்துச்சொல்வதும் தவறில்லை. ஜனநாயகத்தில் இது காலங்காலமாக நடப்பதுதான். ஆனால், நம் நாட்டில் தற்போது நிலவுவது அசாதாரண நிலை. பொருளாதார வளர்ச்சித் தொடர்பாக ஏதோ ஒரு தகவல் தினமும் வெளியாகி, எல்லோரையும் வருத்தப்படச் செய்கிறது. ஐ.எம்.எஃப் போன்ற அமைப்புகள் நம் எதிர்கால வளர்ச்சியைக் குறைத்துவருகின்றன. `இந்த மந்தநிலை மீண்டும் சீரடைய இன்னும் ஓராண்டுகூட ஆகலாம்’ என்கிறார் சில நிபுணர்கள்.

இந்தப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீண்டுவரும் வழிகளை ஆய்வுசெய்து, மக்கள் கஷ்டப்படாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் இப்படிச் சண்டை போடுவதில் யாருக்கு என்ன பயன்? பொருளாதாரத்துக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றாலும், முன்னாள் பிரதமரும், இந்நாள் நிதி அமைச்சரும் பொருளாதாரத்தை நன்கு அறிந்தவர்கள் என்பதால்தான் மக்களால் மதிக்கப்படுகிறார்களே தவிர, தேர்தலில் நின்று வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் என்பதால் அல்ல. நம் பொருளாதார மந்தநிலைக்குக் காரணம், உள்நாட்டில் நிலவும் சிக்கல்கள் மட்டுமல்ல, வெளிநாட்டில் நிலவும் பிரச்னைகளும்தான் என்பதே உண்மை. அப்படியிருக்க, பொருளாதார நிபுணர்களான இந்த இருவரும் ஏன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டும்?

மோசமான பொருளாதார நிலையிலிருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மனமுவந்து யோசனைகளாகச் சொல்ல வேண்டும்; அந்த யோசனைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மனம் திறந்து பரிசீலிக்க வேண்டும். இப்படி நேர்மறையாகச் செயல்படுவதை விட்டுவிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டால், இன்னலில் இருக்கும் சாதாரண மக்கள் அதை நிச்சயம் ரசிக்க மாட்டார்கள்!