லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் கடந்த 2020 மே மாதத்தில் மட்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட 40 சதவிகிதம் அதிகரித்துள்ளன'

கொரோனா சூழல், உலகின் பல முன்னேற்றங்களை நிறுத்திவைத்துள்ளது; பல மகிழ்ச்சிகளைப் பறித்துக்கொண்டுள்ளது; பல துன்பங்களைப் பெருக்கிவருகிறது. குழந்தைகள் உலகமும் இதிலிருந்து தப்பிக்க முடியவில்லை என்பது பெரும் கொடுமை!

குழந்தைகளுக்குப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, ஆன்லைன் வகுப்புகளில் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது, வீட்டில் மொபைல், டிவி என கேட்ஜெட்களில் மூழ்கியுள்ளார்கள் என்பது உயர்வர்க்க மற்றும் மத்தியவர்க்கப் பெற்றோர்களின் பிரச்னை. இவையெல்லாம், குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தற்காலிகமாக ‘தடை’ போட்டிருக்கும் கொரோனா இடையூறுகள் என்று சொல்லலாம். இன்னொருபக்கம், குழந்தைகளின் வாழ்க்கையையே திசைதிருப்பும், பாழாக்கும் சூழல்களை, ஏழை, எளிய, படிப்பறிவற்ற குடும்பங்களில் ஏற்படுத்தியுள்ளது கொரோனா.

அப்பா அம்மாவின் கூலி வருமானம் நின்றுபோனதாலும், பள்ளிகள் மூடப்பட்டதாலும், அந்தக் குடும்பங் களில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்த கொரோனா சூழலில் கவலைக்குரிய வகையில் அதிகரித்துள்ளது. இன்னொருபக்கம், பள்ளிக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளின் சூழலும், கொரோனா காலத்தில் திருமணம் செய்தால் செலவுகள் குறைகிறது என்கிற பெற்றோர்களின் எண்ணமும், 18 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளைக் குழந்தைத் திருமணப் புதைகுழியில் தள்ளும் முடிவை பல குடும்பங்களை எடுக்கவைக்கிறது என்பது அதிர்ச்சி.

நமக்குள்ளே...
நமக்குள்ளே...

சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO - International Labour Organisation) மற்றும் யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில், `உலகளவில் கடந்த 20 ஆண்டுகளாகக் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்த குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, இந்த கொரோனா சூழலில் முதன்முறையாக அதிகரித்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பின்னரும், இந்தக் குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்குக் கொண்டுவருவது மிகப்பெரிய சவாலாக அரசுக்கு இருக்கும் என்றும், அந்தப் பொறுப்பில் அரசு இயந்திரம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள் வல்லுநர்கள்.

இன்னொருபக்கம், இந்தியா முழுக்க லாக்டௌன் காலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்க, `தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் கடந்த 2020 மே மாதத்தில் மட்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட 40 சதவிகிதம் அதிகரித்துள்ளன' என்று CRY (Child Rights and You) தன்னார்வ அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. இது பதிவுக்கு வந்த எண்ணிக்கை மட்டுமே, வராமல் நடக்கும் திருமணங்கள் அதிகம்.

எனவே, இந்த கொரோனா சூழலில் கிராமப்புற, ஏழைக் குழந்தைகளை குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் திருமணங்கள் என்ற இரு பெரும் சீரழிவுகளில் இருந்து மீட்கும் பொறுப்பை அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டு, முழுவீச்சுடன் செயல்பட வேண்டியது மிக மிக அவசியம். மேலும், இந்த முக்கியமான கடமையில் நாம் ஒவ்வொருவருமே சமூகப் பணியாளராகி, நம் கவனத்துக்கு வரும் பாதிக்கப் பட்ட குழந்தைகளை அதிலிருந்து மீட்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வோம். அதுகுறித்த புகார்களுக்கு நாம் அழைக்க வேண்டிய மாநில அரசின் ஹெல்ப்லைன் எண்... 1098.

கடந்தகாலம் எதிர்காலம் ஆகிவிடக் கூடாது தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்