பிரீமியம் ஸ்டோரி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. வாழ்க்கையும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்தத் தருணத்தில் வேலை வாய்ப்புகள் பற்றிய விவாதங்கள், பல்வேறு தளங்களிலும் சூடுபறக்க நடந்து கொண்டிருக்கின்றன. மோட்டார் விகடன் இதழில், ‘வேலைக்கு வித்தைகள் தேவை’ தொடரை எழுதிவரும் மஹிந்திரா நிறுவனத்தின் சங்கர் வேணுகோபால், வரும் 9-ம் தேதி அன்று `புதுமைகளும் புதிய சிந்தனையும் ஆட்டோமொபைல் துறைக்கு எந்த அளவுக்குத் தேவைப்படுகின்றன'; இந்தத் திறமைகளை எப்படி வளர்த்துக் கொள்வது என்பது பற்றி மோட்டார் விகடன் வாசகர்களுக்குப் பிரத்தியேகமான ஒரு பயிலரங்கத்தை, National Institute of Innovation and Entrepreneurship Management (NIIEM)-யைச் சேர்ந்த சயந்தன் முகர்ஜியோடு இணைந்து நடத்த இருக்கிறார். வேலை தேடுகிறவர்களும், செய்கிற வேலையில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல விரும்புகிறவர்களுக்கும் மட்டுமல்ல; ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் அனைவருக்குமே இந்தப் பயிலரங்கம் சுவாரஸ்யமானதாவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதனால் இந்த இதழில் இடம்பெற்றுள்ள இந்தப் பயிலரங்கம் பற்றிய விவரங்களைத் தங்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சென்ற ஆண்டு தீபாவளி, வந்த சுவடே தெரியாமல் சென்றுவிட்டது. ஆனால் அதற்கு வட்டியும் முதலுமாக இந்த ஆண்டு தீபாவளி ஜோராகக் களை கட்டியிருக்கிறது. அதற்குச் சாட்சியாக டெல்லி, கிரேட்டர் நொய்டா, மும்பை, நவி மும்பை, உதய்ப்பூர் என ஆரம்பித்து ஓசூர், பெங்களூரு என்று வாரத்துக்கு இரண்டு டெஸ்ட் டிரைவ்கள் நாடெங்கிலும் நடந்து கொண்டே இருந்தன. நமது ஆசிரியர் குழுவும் தீபாவளிக்கு விற்பனைக்கு வரவிருக்கும் கார், பைக் மற்றும் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்ய, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஊர் ஊராகப் பயணம் மேற்கொண்டார்கள்.

சொஸைட்டி ஆஃப் ஆட்டோமொபைல்ஸ் அசோஸியேஷன் (SIAM) மாதாமாதம் வெளியிடும் தரவுகளின்படி பார்த்தால், கார்களின் விற்பனை சூடு பிடித்துவிட்டது, ஆனால் இருசக்கர வாகனங்களின் விற்பனை இன்னும் பிக்-அப் ஆகவில்லை. இந்த ஏற்றத்தாழ்வை ஈடுகட்டும் வகையிலோ என்னவோ, பல புதிய பைக்குகளும் ஸ்கூட்டர்களும் அறிமுகமாக இருக்கின்றன.

டிவிஎஸ் மோட்டார்ஸில் இருந்து மட்டும் அப்பாச்சி RR310, டிவிஎஸ் ரெய்டர், டிவிஎஸ் என்டார்க் என்று மூன்று வாகனங்களை டெஸ்ட் டிரைவ் செய்து, அதன் ரிப்போர்டை இந்த இதழில் கொடுத்திருக்கிறோம். அதேபோல ஹோண்டாவின் CB200X டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டோடு ஹூண்டாய் i20 N-Line, டாடா டிகோர் EV மற்றும் எம்ஜி ஆஸ்ட்டர் ஆகிய கார்களின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டையும் அளித்திருக்கிறோம். இவற்றோடு யமஹா R15 V4, R15M மற்றும் யமஹாவின் ஸ்கூட்டரான AEROX, இதுதவிர ஃபோர்ஸ் மோட்டார்ஸின் கூர்க்கா மற்றும் சிட்ரன் C3 ஆகியவற்றின் `முதல் பார்வை'யும் இந்த இதழில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆக, இந்தத் தீபாவளி கார் மற்றும் பைக் ஆர்வலர்களுக்குத் தித்திக்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். நன்றி!

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு