Published:Updated:

ஆல்பாஸ் என்பது அரசியல் ஆதாயமே!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

ஆல்பாஸ் என்பது அரசியல் ஆதாயமே!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
தேர்தல் வருவதையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். ‘9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமலே தேர்ச்சி பெறுவார்கள்’ என்ற அறிவிப்பும் அவற்றில் ஒன்று. அரசியல் ஆதாயத்துக்காகக் கல்வியைப் பயன்படுத்துவதும் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதும் கவலையளிக்கக்கூடியது.

சென்ற ஆண்டு தேர்வுகளை ரத்துசெய்து ‘மாணவர்கள் ஆல்பாஸ்’ என்று தமிழக அரசு அறிவித்தது நியாயமானது; தேவையானது. அப்போதுதான் மெல்ல மெல்ல கொரோனாவின் பிடிக்குள் சிக்கத் தொடங்கியிருந்தோம். உலகமே சமூக இடைவெளியையும் பொதுமுடக்கத்தையும் கடைப்பிடித்தபோது பள்ளிகள் மூடப்பட்டு, தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டது நியாயமே.

இப்போது அப்படி இல்லை. ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள். பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் சூழலில் ஆல்பாஸ் அறிவிப்புக்கான தேவைதான் என்ன? இன்னும் கல்வியாண்டு முடிய மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் அவசர அறிவிப்பு ஏன்? இனி எஞ்சியிருக்கும் மாதங்களில் எதையும் படிக்கத் தேவையில்லை என்ற மனநிலையே மாணவர்களிடம் உருவாகும். இந்த ஆண்டு தேர்வுகள் இல்லை என்றால் எதற்காகப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்? ஏன் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்?

கடந்த ஆண்டு 9-ம் வகுப்பு படித்த மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சியளிக்கப்பெற்றார்கள். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பிலும் தேர்வில்லாமல் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவர்கள் பல சிக்கல்களைச் சந்திக்க நேரும். பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்கப்படும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை இவர்கள் அடைவதில் சிரமம் ஏற்படும். மேலும், இவர்கள் எந்த அடிப்படையில் உயர்படிப்புகளுக்கான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வார்கள் என்பது குறித்தும் அரசு தெளிவுபடுத்தவில்லை.

மாநிலப் பாடத்திட்டத்தின்படி செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும்தான் இந்த ‘ஆல்பாஸ்’ அறிவிப்பு பொருந்தும். சி.பி.எஸ்.இ பள்ளிகள் தேர்வுகளை நடத்தும் நிலையில், இரு பள்ளி மாணவர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளி ஏற்படும். நீட், ஜே.இ.இ போன்ற உயர்கல்விக்கான பல்வேறு தேர்வுகளுக்கு இந்த மாணவர்கள் தயாராவதும் சிரமம்.

ஏற்கெனவே கல்லூரி அரியர் தேர்வுகளுக்குத் தமிழக அரசு ‘ஆல்பாஸ்’ அறிவித்ததை யு.ஜி.சி-யும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலும் ஏற்கவில்லை. அந்த முடிவை எதிர்த்து வழக்குகள் நடைபெறும் நிலையில், அந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத உள்ளனர். இந்த முடிவும் அதேபோல வழக்குகளில் சிக்க வாய்ப்பிருக்கிறது.

இந்தக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகள்போல அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்பை வழங்குவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது. அதை ஈடுசெய்ய வேறுவழிகளையே சிந்திக்க வேண்டும். நிச்சயம் ‘ஆல்பாஸ்’ அதற்குத் தீர்வு அல்ல.

ஒரு நல்ல அரசாங்கம் அடுத்துவரும் தேர்தலைப்பற்றி மட்டும் கவலைப்படக்கூடாது. அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைக் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism