Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

எங்கள் தீபாவளி பிளானைக் கொடுத்துவிட்டோம். உங்கள் பிளான்..?

தீபாவளி கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டோம். எப்போதுமே ஓர் அழுத்தத்துக்குப் பிறகான வெளிப்பாட்டில் வேகம் சற்று அதிகம் இருக்கும். அப்படித்தான் கடந்த ஏழு மாதங்களாக கொரோனா கட்டுப்பாடுகளால் சிறைவைக்கப்பட்டிருந்த நம் சந்தோஷங்களுக்கான விடுதலையாக, இந்தப் பண்டிகைக் காலத்தைப் பார்க்கிறோம்.

உங்கள் மகிழ்ச்சிக்கு வண்ணம்கூட்டும் விதமாக, தீபாவளி சிறப்பிதழ் அமையும் என்று நம்புகிறோம். ஷாலினி பத்மநாபன் பகிரும் ஸ்வீட் தீபாவளி, அஞ்சு சங்கர் அறிமுகப்படுத்தும் தீபாவளி டிரெண்ட் உடைகள், பட்ஜெட் பிளானிங் கற்றுக்கொடுக்கும் புவனா, சங்க இலக்கியங்களை பாட்காஸ்ட் செய்துகொண்டிருக்கும் நந்தினி கார்க்கி, கோவிட்-19 கால ஷாப்பிங் வழிகாட்டும் ரெஹானே, ரமணிசந்திரனை நெகிழவைக்கும் காஞ்சனா ஜெயதிலகரின் நட்பு, நம்பிக்கை மனுஷி மணிமேகலை, அறுபதிலும் அசத்தும் புல்லட் தம்பதி, அபூர்வ காதல் தம்பதி ஸ்ரீஜா - மனு, சர்வதேச புகைப்பட விருது பெறும் ஐஸ்வர்யா ஸ்ரீதர் என வித்தியாச பெண்களின் கதைகள் பக்கத்துக்குப் பக்கம் உங்களை ஆச்சர்யப்படுத்தும்.

எங்கள் தீபாவளி பிளானைக் கொடுத்துவிட்டோம். உங்கள் பிளான்..?

ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், வாகனங்கள் எனப் பொதுவாக, ஒவ்வொரு குடும்பத்தின் தீபாவளி ஷாப்பிங்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும். பெருந்தொற்று உலகெங்கும் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார முடக்கங்களால், வழக்கமான தீபாவளி போன்ற பணப்புழக்கம் இல்லாத 2020 இது. எனவே, குறைவான ஷாப்பிங்கிலும் மனது நிறைய தயாராவோம்.

மிக முக்கியமான விஷயம்... பாதுகாப்பான ஷாப்பிங். ஊரடங்குத் தளர்வுகள் அமல்படுத்தப் பட்டிருக்கின்றனவே தவிர, கொரோனா குறைந்துவிட்டது என்று அர்த்தமில்லை. பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை, அரசின் அறிக்கை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் எச்சரிக்கை என ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்கின்றன. இவற்றில் கொரோனா பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் நமக்குக் கிடைப்பதில்லை.கொரோனாவின் இரண்டாம் அலை பற்றிய பேச்சுகள் எழுந்திருக்கும் இந்நேரத்தில், பண்டிகைக்கால ஷாப்பிங், அவுட்டிங், பயணங்களின்போது மாஸ்க், சமூக இடைவெளி உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளில் துளியும் அலட்சியம் வேண்டாம்.

குடும்பத்துக்காகவும் சமூகத்துக்காகவும் தங்கள் விருப்பங்களை எல்லாம் பெண்கள் விட்டுக்கொடுப்பதைப் பற்றிக் கேள்வி எழுப்பும் ‘வல்லமை தாராயோ’ சீரியல் பற்றி நாயகி ஷாலி நிவேகாஸின் பேட்டியைப் படிக்கும்போது, அந்தக் கேள்வியை உங்களுக்குள்ளும் வையுங்கள் தோழிகளே.

எல்லா தருணங்களிலும், தங்களின் தேவைகளைக் குறைத்து மற்றவர்களுக்காகத் தன் பங்கை பிரித்துக் கொடுத்தால்தான் குடும்பத்தலைவியா... இந்தத் தீபாவளி ஷாப்பிங்கில் அதை மாற்றியமைப்போம். ‘மூணு நைட்டி எடுக்கலாம்னு நினைச்சேன்’, ‘ஆபீஸ் யூஸுக்கு ஒரு நல்ல ஹேண்ட்பேக் வாங்கி ரொம்ப நாளாச்சு’, ‘பொங்கலுக்கு புது செருப்பு வாங்கிக்கலாம்’

- இப்படி அத்தியாவசியங்களைக்கூட வழக்கம்போல் தள்ளிப்போடாதீர்கள். உங்கள் தேவைகளை சமரசமின்றி நிறைவேற்றிக்கொள்ளுங்கள் தோழிகளே!

நமக்குள்ளே...