Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை; மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசித் தட்டுப்பாடு - திரும்பிய பக்கமெல்லாம் இத்தகைய கதறல்களால் இந்திய சுகாதாரத் துறையின் நுரையீரல் திணறிக் கொண்டிருக்கிறது. ஆம், கொரோனா மீண்டும் வேகமெடுத்து, ஒரு மாதத்துக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையும் அறல வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் 2021 ஜனவரி 1-ம் தேதியன்று ஒரு நாளில் மட்டும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 20,035. அதேசமயம், 2021 ஏப்ரல் 22 அன்று ஒரு நாளில் மட்டும் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,921 என்பது பேரதிர்ச்சி. அதிரடியாக 16 மடங்கு அதிகரித்திருக்கிறது. இம்முறை குடும்பம் குடும்பமாக ஒரேநேரத்தில் தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனை அட்மிஷனுக்காக க்யூவில் நிற்கிறார்கள். 35, 45 வயது இளைஞர்களும், குழந்தைகளும்கூட இந்தத் தடவை அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு மாஸ்க் மற்றும் சமூக இடைவெளி மட்டுமே தீர்வாக இருந்தது. இந்த ஆண்டு கூடுதல் பாதுகாப்பாகத் தடுப்பூசி போடப்படுகிறது. இது பெரும்நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், `தடுப்பூசி போட்டுவிட்டோம் என்பதற்காக மாஸ்க்கையும் சமூக இடைவெளியையும் மறக்கக்கூடாது' என்கிற மருத்துவர்களின் முக்கியமான வேண்டுகோள்... அனைத்து மட்டத்திலும் பட்டவர்த்தனமாக மீறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் முழு ஊரடங்கு. அனைவருமே வீட்டுக்குள் அடங்கிக் கிடந்தோம். இந்த ஆண்டு ஏப்ரலில் அனைவருமே வீதிகளில்தான் இருக்கிறோம். கொரோனா வேகமாகப் பரவுவதற்கு இதைவிட வேறு பெரிய காரணம் என்னவாக இருந்துவிட முடியும்?

நமக்குள்ளே...
நமக்குள்ளே...

அதற்காக மீண்டும் ஊரடங்கு என்கிற பெயரில் முடங்குவது, பொருளாதார ரீதியிலும் பேரிழப்புகளைக் கொண்டுவந்து சேர்த்துவிடும். அதேசமயம், `சுவர் இருந்தால்தான் சித்திரம்' என்று சொல்லப்படுவதுபோல, உயிர்ப் பிழைத்திருப்பதுதான் எல்லாவற்றையும்விட முக்கியமானது என்பதை அனைவருமே உணர வேண்டிய தருணம் இது. மிக மிக அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் செல்வதையே முற்றாகத் தவிர்க்க வேண்டும். தேவையற்றவர்களின் நடமாட்டம் குறையும்போது, பிழைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் செல்பவர்களுக்குப் பிரச்னைகள் இருக்காது.

திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் என்று அனைத்துக்கும் சிறிது காலம் விடுமுறை விடலாம்; திருமணங்கள் உள்ளிட்ட குடும்ப விழாக்களையும் தள்ளி வைக்கலாம்; ஏன், துக்க நிகழ்வுகளுக்காக ஒன்று கூடுவதையும்கூட தவிர்க்கலாம். நெருங்கிய சொந்தங்கள் சில மட்டுமே போதுமென்று அனைவருமே ஒருமனதாக முடிவெடுக்கலாம்.

சித்தப்பா கோவித்துக் கொள்வார்; அத்தை கோபப்படுவார்; அண்ணி வருத்தப்படுவார்; அண்ணன் ஆத்திரப்படுவார் என்கிற காரணங்களையெல்லாம் கையில் வைத்துக்கொண்டு, தடுமாறவே கூடாது. புகைப்படம், வீடியோ, ஃபேஸ்புக் லைவ் என்று பல வழிகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட முடியும். ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், யாரும் யாரையும் பார்த்துக்கொள்ளக்கூட முடியாது. மருந்து, ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கை பிரச்னைகளையெல்லாம் கடந்து, மருத்துவ சிகிச்சைகள் கிடைத்தாலும்கூட, அந்த மரண அவஸ்தை தேவையா என்று யோசிப்பதுதான் இப்போதைய முக்கிய தேவை!

மாஸ்க்கை மறக்காமலிருப்போம்...

சமூக இடைவெளியைக் குறைக்காதிருப்போம்...

கொரோனாவைப் பற்றாதிருப்போம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்