தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான மணிகண்டன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது அமைச்சர் மணிகண்டன், ``எனது அமைச்சகத்தின் கீழ்தான் அரசு கேபிள் டிவி நிறுவனம் உள்ளது. ஆனால், என்னைக் கலந்தாலோசிக்காமலேயே கால்நடைத்துறை அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணனை இந்நிறுவனத்தின் தலைவராக, முதல்வர் நியமித்துவிட்டார். ராதாகிருஷ்ணனே ஒரு தனியார் கேபிள் டிவி நிறுவனத்தை நடத்துபவர்தான். அதனால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக, அவர் தனது கேபிள் டிவி நிறுவனத்தில் உள்ள இரண்டு லட்சம் இணைப்புகளை, முதலில் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மாற்ற வேண்டும்’’ என்று பேசினார்.
மணிகண்டனின் இந்தப் பேச்சுக்காகத்தான் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்றால், முதல்வருக்குச் சில கேள்விகள்.
தனியார் கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் ஒருவரை அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்குத் தலைவராக நியமிப்பது சரிதானா? அப்படி நியமிக்கப்பட்டால் அவரது விசுவாசம் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு இருக்குமா, அல்லது, தன் சொந்த கேபிள் நிறுவனத்துக்கு இருக்குமா? தனியார்களுக்குச் சொந்தமான போட்டி கேபிள் டிவி நிறுவனங்களிடம் அவரால் நியாயமாகவும் நடுநிலையோடும் நடந்துகொள்ள முடியுமா?
இந்த அரசைப் பொறுத்தவரை அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வருவது புதிதல்ல. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்மீது குட்கா ஊழல் புகார், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிமீது `வேண்டப்பட்டவர்களுக்கே பணிகளைக் கொடுக்கிறார்’ என்று புகார். உணவுத்துறை அமைச்சர்
ஆர்.காமராஜ்மீது பருப்பிலும் பாமாயிலிலும் ஊழல் என்று குற்றச்சாட்டு. ‘பேராசிரியர்களின் பணிமாற்ற உத்தரவுகளில் முறைகேடு’ என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்மீதும் குற்றம் சாட்டுகிறார்கள்.
அனைத்துக்கும் மேலாக, ‘மணல் மாஃபியாக்களோடு தொடர்பு’ என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்மீதே சந்தேகங்கள் எழுந்தன. அவ்வளவு ஏன், இந்த மணிகண்டன்மீதே செட்டாப் பாக்ஸ் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு உண்டு. அதுமட்டுமா, பல்லாயிரம் கோடி மதிப்பிலான சாலை ஒப்பந்தங்களை எல்லாம் தன் சொந்த சம்பந்திக்கே கொடுக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மீதே குற்றச்சாட்டு உள்ளதே?
இவற்றையெல்லாம் எதிர்கொண்டு, `நான் நேர்மையானவன் என்று நிரூபிக்கும் வரை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்’ என்று எந்த அமைச்சரும் பதவி விலகவும் இல்லை; எடப்பாடி பழனிசாமியும் எந்த அமைச்சரையும் நீக்கியதுமில்லை.
இங்கே ஆட்சி இந்த லட்சணத்தில்தான் நடக்கிறது. அதனால், ‘வாய்மையே வெல்லும்’ என்பதற்கு பதிலாக, ‘ஊழலே வெல்லும்’ என்று தனது இலச்சினையின் கீழ் இந்த அரசு எழுதிக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.