தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

பிசினஸில் சாதிக்கும் பெண்களுக்குப் பெரும் மனத்துணிவு உண்டு

முன்னெப்போதையும்விட அதிகமாக அண்டை வீட்டாருடன் நட்பு பாராட்ட வேண்டிய அவசியமும் அவசரமும் இப்போதுள்ள பெண்களுக்கு இருக்கிறது. அதற்குக் காரணம் பின்வரும் புள்ளிவிவரம்.

அண்மையில் வெளியான தேசிய க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ கணக்கெடுப்பு, 2018-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 63 இல்லத்தரசிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சொல்கிறது. இந்தியாவில் நிகழும் மொத்தத் தற்கொலைகளில் இது 17.1 சதவிகிதம். 2001-ம் ஆண்டு முதல் இந்தியாவில் 20,000 குடும்பத்தலைவிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். லான்செட் அமைப்பின் ஆய்வுகள் உலகில் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களில் மூவரில் ஒருவர் இந்தியப் பெண் என்று சொல்கின்றன. இதில் 40-49 வயதுப் பெண்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம் என்று தேசிய மனநலக் கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. போதிய கல்வி அறிவில்லாதவர்கள், நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள், இணையைப் பிரிந்தவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாத பெண்கள் எனப் பல தரப்பினரும் தற்கொலை செய்துகொள்வதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் விளக்குகின்றன.

உண்மையில் நாம் கவலைகொள்ள வேண்டிய புள்ளிவிவரங்கள் இவை. பெண்கல்வியின் அவசியத்தை நாம் எல்லோரும் இப்போது அறிவோம். இன்று வணிக உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பெண்களில் பலர் பெரிய அளவில் கல்வியறிவு இல்லாதவர்களே. ஆனால், பிசினஸில் சாதிக்கும் பெண்களுக்குப் பெரும் மனத்துணிவு உண்டு, எத்தகைய சூழலிலும் தன்னிலை தவறாது கொண்ட குறிக்கோளில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இந்தப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் அண்டை வீட்டில் வசிப்பவர்கள் யார் என்பதுகூட அறியாத தீப்பெட்டி வாழ்க்கை வாழ்பவர்கள் என்கிற விமர்சனங்கள் உண்டு. ஆனால், கேட்டட் கம்யூனிட்டிகள், அப்பார்ட்மென்ட் அசோசியேஷன்கள், அவை நடத்தும் கலைவிழாக்கள், பொதுவிழாக்கள் என்று இப்போது சூழல் மாறிவருகிறது.

இணையைப் பிரிவது என்பதும் பேரிழப்புதான். முன்னொரு காலத்தில் கணவன் இறந்துவிட்டால் ‘சதி’ என்கிற பெயரில் தீநாக்குகளுக்கு இரையாக்கப்பட்டு, ‘தெய்வங்கள்’ ஆன பெண்கள் உண்டு. இன்றைய நிலை வேறு. பிரிவு என்பது வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத சம்பவம் என நன்றாகவே உணரத் தொடங்கியிருக்கிறோம். குடும்ப அமைப்பு சிதைந்துகொண்டிருக்கும் அதே வேளையில், 40 வயதுக்கு மேற்பட்ட மறுமணம், முதிய வயதில் காதல் திருமணங்கள் என்று அங்கங்கே வசந்தங்கள் மலராமலில்லை. அவர்கள் வாழும் அதே பூமியில்தானே நாமும் வாழ்கிறோம்!

அலைபேசிகளும் சமூக ஊடகங்களும் சொடுக்குப்போடும் தொலைவில் இருந்தும் தனிமையில் தவிக்கும் எத்தனையோ பெண்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். டிக்டாக்கிலும் ஹெலோவிலும் செய்வதறியாது நம் கவனம் ஈர்க்கும் பெண்களைப் பார்க்கிறோம். நாம் செய்ய வேண்டியது என்ன? சக பெண்ணிடம், சக உயிரிடம் அன்புகொள்ளக்கூட முடியாமல் அப்படி என்ன நேரமின்மை நமக்கு? குடும்பங்களில் உரையாடல்களைத் தொடங்குவோம். குழந்தைகளிடம், வீட்டிலுள்ள பெரியவர்களிடம், வாழ்க்கைத்துணையிடம் என்று எல்லோரிடமும் குறைந்தபட்ச உரையாடல்கள் இருக்கட்டும்.

உங்களைச் சுற்றியுள்ள பெண்களை கவனியுங்கள்; கொஞ்சம் பேசுங்கள்; நிறைய கேளுங்கள். தற்கொலைக்குச் சிறந்த தடைக்கல் `பேச்சு’ மட்டுமே. பேசுவோம்… நிறைய!

நமக்குள்ளே...
நமக்குள்ளே...