பிரீமியம் ஸ்டோரி
மிழக சிறப்பு டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மீதான பாலியல் அத்துமீறல் புகாரைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் சம்பவங்கள், ‘தேர்தல் சூழலைக் காரணம் காட்டி அந்த அதிகாரியைத் தமிழக அரசு காப்பாற்ற நினைக்கிறதோ’ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்பியுள்ளன.

இந்தப் புகாரைக் கொடுத்தவர் எளிய அபலைப்பெண் அல்லர்; மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் புகார் கொடுக்க முயன்றபோது, காவல் துறையில் இருக்கும் நிறையபேர் அவருக்கு மிரட்டல் தொனியில் அறிவுரை கூறியுள்ளனர். அவரின் உறவினர்களுக்கும் மிரட்டல் வந்துள்ளது. இத்தனை மிரட்டல்களையும் மீறிப் புகார் தர சென்னை வந்தபோது, அதிரடிப்படை போலீஸாருடன் சென்று அவரை வழிமறித்திருக்கிறார் ஒரு மாவட்ட எஸ்.பி.

எல்லாத் தடைகளையும் மீறி அந்தப் பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கமாக இதுபோல ஓர் அரசு ஊழியர்மீது புகார் எழும்போது, அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவது மரபு. ஆனால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அந்த உயர் அதிகாரியைத் தமிழக அரசு இதுவரை பணியிடை நீக்கம்கூடச் செய்யவில்லை. அவரைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருப்பதே பெரிய தண்டனை என்று அரசு நினைத்திருப்பது பெரிய அதிர்ச்சி. ‘புகார் தர வேண்டாம்’ எனப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை அச்சுறுத்திய யார் மீதும் நடவடிக்கை இல்லை. அவர் வாகனத்தை வழிமறித்த போலீஸ் அதிகாரி பெயரும் புகாரில் உள்ளது. அவர்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த வழக்கை விசாரிக்க முதலில் நியமிக்கப்பட்ட அதிகாரி உடனடியாக மாற்றப்பட்டு, வேறொரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். பணியிடங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல்ரீதியிலான அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்படும் விசாகா கமிட்டியும் இந்தச் சம்பவத்தில் அமைக்கப்பட்டது. ஆறு பேர் கொண்ட அந்தக் கமிட்டிகூட, இன்னமும் கூடி விசாரிக்கவில்லை. விடுப்பில் இருக்கும் ஓர் அதிகாரியை கமிட்டியில் நியமித்ததே இதற்குக் காரணம். இப்போது அவருக்கு பதிலாக இன்னொருவரை நியமித்துள்ளனர்.

இப்படி விசாரணை நடைமுறைகளும் ஒழுங்கு நடவடிக்கைகளும் தாமதிக்கப்படுவது, அந்த உயர் போலீஸ் அதிகாரிக்குச் சாதகமாகவே அரசு செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகார வர்க்கத்தின் அரவணைப்பில் இருப்பவர்கள் எந்தக் குற்றத்தையும் செய்துவிட்டு சாதாரணமாக வலம்வரலாம் என்று நிலவும் சூழல் ஆபத்தானது.

உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் புகார் செய்வதற்கே பல தடைகளைக் கடந்து வர வேண்டியுள்ளது. அதன்பிறகும் நியாயமான நடவடிக்கை இல்லை. இவருக்கே இப்படி என்றால், எளிய பெண்களுக்கு அநீதி நேரும்போது சட்டமும் நீதியும் அவர்களைக் காக்குமா என்ற கசப்பான கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.

பெண் காவல்துறை அதிகாரியிடம் பாலியல் அத்துமீறல் நிகழ்த்திய உயர் அதிகாரிமீது தகுந்த நடவடிக்கை எடுத்தால்தான், ‘தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்’ என்பதை உறுதிசெய்யும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு