சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வருமுன் காப்போம்!

வருமுன் காப்போம்!
News
வருமுன் காப்போம்!

நம்பிக்கையுடன் கொரோனாவையும் எதிர்கொள்வோம்!

சென்ற வாரம் ‘கொரோனா’ என்பது அச்சமூட்டும் வெளிநாட்டுச் செய்தி. ஆனால் இப்போதோ அது உள்ளூர்ச்செய்தி. இந்தியாவில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றனர். கொரோனா அச்சத்தால் பிரதமரும் குடியரசுத் தலைவரும் ஹோலி கொண்டாட்டங்களை ரத்துசெய்திருக்கிறார்கள். கொரோனாவுக்குத் தமிழகமும் தப்பவில்லை.ஐ.பி.எல் போட்டியும் ரத்தாகும் என்கிறார்கள். யாருக்கு போன் செய்தாலும் இருமல் சத்தமும் அதைத் தொடர்ந்து கொரோனா குறித்த அறிவிப்பும் கேட்கின்றன.

வருமுன் காக்கவேண்டிய நடவடிக்கைகளையும் வந்தபின் செய்யவேண்டிய பாதுகாப்புமுறைகளையும் சிந்திக்கவேண்டிய தருணம் இது. முதலில் இதுகுறித்துச் சமூகவலைதளங்கள் தொடங்கி வாய்மொழி வரை பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் வதந்திகளையும் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். ‘கொரோனா’ வைரஸ் எப்படிப் பரவுகிறது, எப்படித் தடுப்பது, பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வரும் அறிகுறிகள், சிகிச்சைமுறைகள், அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்த ‘வழிகாட்டும் நெறிமுறைகளை’த் தமிழக அரசு அதிகாரபூர்வமாக உருவாக்கிப் பரப்ப வேண்டும். இது கொரோனா குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதுடன் தேவையற்ற வதந்திகள் பரவுவதையும் தடுக்கும். மத்திய அரசு உருவாக்கியதைப்போல இதற்கென அமைச்சர்கள் குழுவையும் தேவைப்பட்டால் தமிழக அரசு உருவாக்கலாம்.

இப்போதே சிலர் முகமூடிகளைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. பலரும் இதைப் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது முகமூடிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம். இப்போதே முகமூடிகளின் விலை அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. எனவே தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி அரசு அலுவலகங்கள் மூலம் முகமூடிகள் மக்களுக்குப் பரவலாகக் கிடைக்க வழிசெய்ய வேண்டும். அதேபோல் முகமூடிகளின் விலையையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

தமிழக மக்கள் சில அடிப்படையான விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

Don’t touch Men (Mouth, Eyes & Nose) என்பது போன்ற பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அடிக்கடி கைகளைக் கழுவுவது போன்ற அடிப்படையான விஷயங்களை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். இருமல், தும்மல் போன்றவை வரும்போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்ப்பது அத்தியாவசியம். கோடைக்காலம் என்பதால் சுற்றுலாக்கள் அதிகம் போவது வழக்கம். அதுகுறித்துத் திட்டமிடுவதற்கு முன், கொரோனாவையும் நினைவில்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்வகையிலான உணவை உண்பதும் முக்கியம்.

‘வருமுன் காப்போம்’, ‘நோய் நாடி நோய்முதல் நாடி’ என்றெல்லாம் பலநூற்றாண்டுகளாக சுகாதார விழிப்புணர்வுமொழிகளைச் சொல்லிப் பழகியவர்கள் நாம். கிருமியின் பெயர்கள் மாறலாம். ஆனால் எந்தப் பிரச்னைக்குமான முதல் மருந்து நம்பிக்கைதான். நம்பிக்கையுடன் கொரோனாவையும் எதிர்கொள்வோம்!