என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

தலையங்கம்

ழையன கழிதலும் புதியன புகுதலுமான பொங்கல் பண்டிகை... இன்னும் சில தினங்களில்!

‘பழையது’ என்றாலே, ‘கழித்தலுக்குரியது’ என்பதல்ல. ‘பயன்படும்’ என்றால், ‘பழையது’ம்கூட என்றென்றும் புகுதலுக்குரியதே. அதேபோல, ‘பயன்படாது’ என்றால், புதியதாக இருந்தாலும் அந்த நிமிடமே கழித்தலுக்குரியதே. இதை, இந்த கொரோனா காலம் நமக்கு வெகு அழுத்தமாகவே உணர்த்திக்கொண்டிருக்கிறதுதானே தோழிகளே...

கொரோனாவின் முதற்கட்ட ஊரடங்கில் வாசல்படிகூட தாண்ட முடியாமல் வீட்டுக்குள் முடங்கிய நாம் அனைவருமே வாழ ஆரம்பித்தது ‘பழைய வாழ்க்கை’யைத்தானே...

24 X 7 வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்டோம். தினமும் சுவைத்து மகிழ்ந்த பிஸ்கட், சாக்லேட்களை தேடாமலும், வாரம் ஒருமுறை சுவைத்துப் பழகிய பீட்சா, பர்கர்களை மறந்தும் நம் பிள்ளைகளால் இருக்க முடியும் என்பதை அப்போதுதானே அறிந்துகொண்டோம். வீட்டிலேயே பலகாரங்கள் செய்து சாப்பிட்டோம். மொட்டைமாடியில் நிலாச்சோறு உண்டோம். பட்டங்கள் பறந்த வானம் பார்த்தோம்.

நமக்குள்ளே
நமக்குள்ளே

தியேட்டர், ஹோட்டல், மால் என வார இறுதி அவுட்டிங் கலாசாரம் அத்தியாவசியம் என்று நம்பிக்கொண்டிருந்த நாம், குடும்பமாக அமர்ந்து பேசினோம், சிரித்தோம். மஞ்சள், இஞ்சி, வேம்பு, எலுமிச்சையின் அருமை உணர்ந்தோம். கை கால், முகம் கழுவிப் பழகினோம். இவ்வளவு ஏன்... முடிதிருத்தவும்கூட பழகிக்கொள்வோம் என நினைத்தாவது பார்த்திருப்போமா?!

ஆன்லைனிலும், ஷாப்பிங் மால்களிலும் ஆடைகளையும் பொருள்களையும் வாங்கிக் குவித்துக்கொண்டிருந்தவர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள் ஸ்வைப் செய்யப்படாமல் ஓய்வெடுத்தன. அதனால் வீட்டில் எதுவும் குறைந்துவிடவில்லை. தேவைக்கு வாங்குவதைவிட விளம்பரங்களுக்காகவே வாங்கிக் குவித்து வந்திருக்கிறோம் என்பதையும் உணர்ந்தோம். ஆடம்பரங்கள் ஒழிந்த எளிய திருமணங்களை நடத்தினோம்.

இப்படி, இந்தக் கொரோனா நம்மை பயனுள்ள பழைய வாழ்க்கைமுறைக்கு ஏற்கெனவே கொஞ்சம் திருப்பி விட்டிருக்கிறது. அந்தப் பாதையை செப்பனிட்டபடியே தொடர்ந்து பயணிப்போம். ஜங்க் ஃபுட் மற்றும் ஸ்நாக்ஸ், தேவையற்ற ஷாப்பிங், பல லட்சங்களில் திருமணச் செலவுகள் உள்ளிட்டவற்றுக்கெல்லாம் நோ சொல்வோம். வீட்டுச் சாப்பாடு, ஃபேமிலி டைம், சுகாதாரம், நோய் எதிர்க்கும் உணவுகள் உள்ளிட்டவற்றையெல்லாம் இனியும் தொடர்வோம்.

வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல், சளி, செரிமானக் கோளாறு போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு அஞ்சறைப் பெட்டி மருந்து, வீட்டுத் தொட்டியிலேயே ஆரோக்கியம் தரும் மூலிகைச் செடிகள், தரையில் சம்மணமிட்டு அமரும் வழக்கம், மண்பானை தண்ணீர் என முந்தைய தலைமுறைகளின் இயற்கையான வாழ்க்கைமுறைக்குத் திரும்புவதற்கு நம்மால் ஆன எளிய முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.

இவையெல்லாம் பாரம்பர்யத்தைக் காப்பாற்றுவதற்காக அல்ல, நம் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக்கொள்வதோடு, ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்கவும்தான் என்றுணர்வோம்.

தை பிறக்கட்டும் வளம் நலம் சூழ!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்