சென்னை, பள்ளிக்கரணையில் அ.தி.மு.க. பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காகச் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததால், தன் டூவீலரோடு நிலைதடுமாறி விழுந்த 27 வயது சுபஸ்ரீ, பின்னால் வந்த லாரி மோதியதில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார்.

‘உங்களுக்கு இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது’ என்று ஆட்சியாளர்களையும் அதிகாரிளையும் பார்த்து உயர் நீதிமன்றமே சீறியிருக்கிறது.

பேனர் எமன்களுக்கு எதிரான குரல்... இன்று, நேற்று எழுந்ததல்ல. ‘டிராஃபிக்’ ராமசாமி என்னும் மனிதருடைய பொதுவாழ்க்கையின் பெரும்பகுதி, பேனர்களுக்கு எதிரான போராட்டங்களில்தான் கழிகிறது. கடந்த 2017-ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்கிற பெயரில் தமிழகமெங்கும் பேனர்கள் வைக்கப்பட்டன. நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும் அவை அகற்றப்படவில்லை. அவற்றில் ஒன்று, கோவையில் ரகு என்ற இளைஞரின் உயிரைப் பறித்தது. அவர் கொல்லப்பட்ட சாலையில், ‘ரகுவை கொன்றது யார்?’ என்று எழுதி நீதி கேட்டனர் அவருடைய நண்பர்கள். அப்போதைக்குப் பரபரப்பான செய்தியாக மாறியதே தவிர, பேனர்கள் நிறுத்தப்படவில்லை. சுபஸ்ரீயின் மரணத்தையும் இப்படி அனுதாபத்துடனும் ஆவேசத்துடனும் கடந்துவிடக் கூடாது.

சுபஸ்ரீயின் உயிரை விளம்பர வெறியர்கள் குடித்திருக்கும் நிலையில்... ‘அக்கறை பொங்க’ ஆரம்பித்துவிட்டது ஆள்வோருக்கும் ஆளத்துடிப்போருக்கும்! ‘பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்கள் வைக்கவேண்டும்’ என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கட்சிக்காரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். ‘பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன்’ என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட இன்னும் பலரும் இதேபோல கிளம்பிவிட்டனர்.

பேனர் வைத்து உயிர் பறிக்கும் கட்சிக்காரர்களைவிட, இவர்களின் இத்தகையச் செயல்கள்தான் மிகமிகக் கொடுமையானதாக இருக்கின்றன. ஒவ்வொரு தடவையும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது, சம்பிரதாயமாக அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். அடுத்தடுத்த நாள்களிலேயே, ‘வீதியில் நமக்கு எத்தனை வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டன’ என்று கணக்கெடுத்தபடியே காரில் பயணிக்கிறார்கள் இந்த வாய்ச் சொல்வீரர்கள்.

சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டச் செய்தி ஊரெங்கும் பதற்றத்துடன் பரவிக் கொண்டிருந்தவேளையிலும் சென்னை, மதுரை, கோவை பல ஊர்களிலும் இந்த அரசியல்தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அங்கெல்லாமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. போலீஸார் தலையிட்டுத்தான் அவற்றையெல்லாம் அகற்றியுள்ளனர்.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் திருமணம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டுவிழா, காதுகுத்துவிழா, சாதிச்சங்க நிகழ்ச்சிகள், நடிகர்களின் பிறந்தநாள் விழாக்கள், கோயில் திருவிழாக்கள் என எதற்கெடுத்தாலும் பேனர்கள் வைக்கின்றனர். பேனர் என்பது, ‘கெத்து’ காட்டும் ஒரு மீடியமாக மாறிக்கிடப்பதுதான் இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் காரணம்.

நீதிமன்றம் கடந்தகாலங்களில் பிறப்பித்த எல்லா உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டது இந்த அரசும் அரசியல்வாதிகளும்தான். இவர்கள் அத்தனைபேருக்குமே சுபஸ்ரீ கொல்லப்பட்டதில் கூட்டுப்பங்கிருக்கிறது. கோவை ரகுவின் மரணம் நிகழ்ந்த இந்த இரண்டாண்டு காலத்திலும், சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர்களை உள்ளூர ரசித்தபடியேதானே பயணித்தனர் இவர்களெல்லாம். இவர்கள் யாரும் அந்த நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கவோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ முனையவில்லை என்பதுதான் நிதர்சனம்.

ஒரு நாளும் இவர்கள் மாறவே போவதில்லை. மக்கள்தான் மாற்றவேண்டும். ஒரே ஒரு டிராஃபிக் ராமசாமி இதைச் செய்தால், ‘ஜோக்கர்’ என்று சொல்லி, எள்ளிநகையாடியபடியே கடக்கிறார்கள் அல்லது பேனர் பார்ட்டிகள் அவரை உருட்டி மிரட்டுகிறார்கள். ஆனால், ‘உயிர் குடிக்கும் இந்த பேனர் கலாசாரத்துக்கு நான் துணைபோக மாட்டேன்’ என்று நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்பதோடு, அத்தகைய பேனர்களை அகற்றுவதற்காக காந்திய வழியில் கைகோத்து, வீதியில் இறங்கிப் போராடினால்... விளம்பரப் பார்ட்டிகள் ஓடிஒழிந்தேவிடுவார்கள்.

ஆளுகின்ற அரசும், ஆளத்துடிக்கும் அரசியல்வாதிகளும் நீதிமன்ற உத்தரவுகளைக் காலில் போட்டு மிதித்தபடி உயிர்ப்பலிகளுக்குத் துணைபோய்க் கொண்டிருக்கும் சூழலில், பொதுமக்களாகிய நாம்தானே நீதியை நிலைநாட்டவேண்டும்!