Published:Updated:

ஒடுக்குமுறைக்கு எதிரான உரத்த குரல்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

ஒடுக்குமுறைக்கு எதிரான உரத்த குரல்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

குறிப்பு : ‘கறுப்பரினத்தவர்’ என்ற சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் நிறத்தின் அடிப்படையிலானது என்பதால், ஆப்ரோ - அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுவதே சரியான பயன்பாடு. விகடன் குழுமத்தில் இனி இப்படியே பயன்படுத்தப்படும்.

ப்ரோ-அமெரிக்கர்கள் மீதான நிறவெறி ஒடுக்குமுறையும் அதற்கு எதிரான போராட்டங்களும் உலகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்னும் அவ்வினத்தைச் சேர்ந்த இளைஞரின் மரணமே இந்தப் போராட்டங்களுக்கு வித்திட்டது.

சந்தேகத்தின் பெயரில் ஃப்ளாய்டை மினசோட்டா மாகாணத்தின் சாலை ஒன்றில் மடக்கிய போலீஸார், தப்பியோடிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தரையில் தள்ளி, கால்முட்டியை அவரது கழுத்தில் அழுத்திக் கிடுக்கிப்பிடி போட்டனர். ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை’ என்று ஜார்ஜ் கதறியும், போலீஸ் அவரது கழுத்தை அழுத்திக்கொண்டிருந்த காலை அகற்றவில்லை. எட்டு நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஜார்ஜ் இறந்துவிட, நிறவெறிக்கும் இனப்பாகுபாட்டுக்கும் எதிரானவர்கள் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘சம உரிமை’ பேசும் நாடாக இருந்தாலும் அமெரிக்காவில் பணியிடம், குடியிருப்புப் பகுதிகள், கல்விக்கூடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் இனப்பாகுபாடு தொடரத்தான் செய்கிறது. நூற்றாண்டுக்காலமாக வேரூன்றியுள்ள இனப்பாகுபாட்டை அமெரிக்கா முற்றிலும் களையவேண்டிய தருணம் இது. ஆப்ரோ-அமெரிக்கர்களுக்கு நீதி கேட்டு அனைத்து இன மக்களும் அனைத்து நாடுகளிலும் போராட்டக்களத்துக்கு வருவது அதிகரித்திருப்பது வரலாற்றில் குறித்துக்கொள்ளப்பட வேண்டிய செய்தி.

ஒருபுறம் ஆயுதம் ஏதுமின்றிக் கோபமாக நீதிகேட்டு வரும் இளம்பெண்கள் மற்றும் போராட்டக்காரர்கள் முன்பு ஆயுதமும் பாதுகாப்புக் கவசமும் தரித்த போலீஸார் மண்டியிட்டு, அவர்களின் வேதனையைப் பகிர்ந்துகொண்டார்கள். இன்னொரு புறம், அறவழியில் போராடும் மக்களின்மீது காவல்துறை வன்முறை வெறியாட்டத்தை நடத்தியதும் நிகழ்ந்தது. நியூயார்க்கில் நடைபெற்ற போராட்டத்தில் 75 வயது முதியவரைக் காவல்துறை தள்ளிவிடுவதும் கீழே விழுந்தவரைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை நகர்ந்ததும் ஒரு துயரமான உதாரணம்.

இதற்கிடையில்தான் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவைச் சேர்ந்த ரேய் ஷர்ட் புரூக்ஸ் என்ற ஆப்ரோ-அமெரிக்க இளைஞர், உணவு விடுதி ஒன்றின் வாடிக்கையாளர்களைத் தடுக்கும்விதத்தில் நடந்துகொண்டதாகச் சொல்லிக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்கொன்ற காவல்துறை அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டதாக அட்லாண்டா மேயர் தெரிவித்தபோதிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகின் பல பகுதிகளிலும், தன்னைப்போல் அல்லாமல் நிறத்தாலோ மொழியாலோ பழக்கவழக்கங்களாலோ நம்பிக்கைகளாலோ வேறுபட்டிருப்பவர்களைக் குற்றவாளிகளாகக் கருதும் மோசமான மனநிலை உள்ளது. நிறத்தின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் உலகின் எந்த மூலையில் பாகுபாடு காட்டப்பட்டாலும் அது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே.

ஆப்ரோ-அமெரிக்கர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக, மனசாட்சியுள்ள அனைவரும் உரத்த குரல் எழுப்புவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism