Published:Updated:

தன்மானத்துக்கு இழுக்கு!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தன்மானத்துக்கு இழுக்கு!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
ள்ளாட்சித் தேர்தலின்போது, சில கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ஏலம் விடுவார்கள். யார் அதிக பணம் கொடுத்து ஏலம் எடுக்கிறாரோ, அவருக்கே பதவி கிடைக்கும். ‘வாக்களித்துத் தங்களுக்கான தலைவரைத் தேர்வு செய்யும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயல்’ என அதைத் தடை செய்துவிட்டார்கள். என்றாலும், ரகசியமாக இப்படி ஏலங்கள் நடைபெறுகின்றன.

தமிழகக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கும்போது, ‘சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடக்கிறதா, அல்லது, ஏலம் நடக்கிறதா?’ என்ற சந்தேகம் எழுகிறது. ‘குடும்பத்தலைவிகளுக்கு ஊதியம் தருவோம்’ என்று கமல்ஹாசன் சொன்னார். உடனே, ‘இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்’ என்றார் ஸ்டாலின். ‘நாங்கள் மாதம் 1,500 ரூபாய் தருகிறோம்’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘மாதம் ஆறு சிலிண்டர்களை விலையில்லாமல் தருகிறோம்’ என்கிறது அ.தி.மு.க. ‘காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்’ என தி.மு.க சொல்கிறது. இன்னும் வாஷிங் மெஷின், இலவச கேபிள் இணைப்பு, இலவச டேப்லட், சூரியசக்தி அடுப்பு என இலவசங்களை அடுக்குகின்றன இரண்டு கட்சிகளும்.

கொள்கைகள், சாதனைகள், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேர்தல் போட்டி நிகழ வேண்டும். இப்படி இலவசங்களால் கவர்ச்சி வலை வீசி, வாக்காளர்களை வசப்படுத்த நினைப்பது அவமானம். இரவில் ரகசியமாகப் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள். பட்டப்பகலில் வாக்காளர்களின் ஜனநாயக உரிமையை வெளிப்படையாக விலைபேசுகின்றன தேர்தல் அறிக்கைகள். ‘நடைமுறைக்குச் சாத்தியமில்லாத, தேர்தலை சமநிலையற்ற போட்டிக்களமாக மாற்றுகிற வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது’ என்பது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறி. இந்த விஷயத்திலோ, கைகட்டி வேடிக்கை பார்க்கிறது தேர்தல் ஆணையம்.

ஓர் அரசு இலவசத் திட்டங்களையே செய்யக்கூடாது என்பதல்ல; அது மாநில வளர்ச்சிக்கும் மனிதவள மேம்பாட்டுக்கும் உதவ வேண்டும். கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை இலவசமாகத் தருவது அவசியம். பள்ளிகளில் மதிய உணவு அளிப்பதும், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தருவதும் கல்வி தடையில்லாமல் தொடர உதவுகின்றன. இப்படி வளர்ச்சிக்கும் வளத்துக்கும் உதவுவதாகவே இலவசங்கள் இருக்க வேண்டும். ‘எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்துவிட்டு வாக்கு வாங்கினால் போதும்’ என நினைப்பது ஆபத்தானது. எல்லாவற்றுக்கும் அரசிடம் கையேந்தும் யாசக மனநிலையில் மக்கள் இருப்பதாக இந்தக் கட்சிகள் நினைக்கின்றனவா? இலவசங்களை எதிர்பார்க்கத் தேவையற்ற நிலைக்கு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே நல்ல அரசுக்கு இலக்கணம்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வருமானத்தைப் போல மூன்று மடங்கு அளவு கடனில் மூழ்கியிருக்கிறது தமிழக அரசு. இந்த ஆண்டு பட்ஜெட்டில் பற்றாக்குறை சுமார் 41,000 கோடி ரூபாய். இந்தச் சூழலில் இந்த இலவசங்களைத் தர எங்கிருந்து நிதி கிடைக்கும்? டாஸ்மாக் கடைகளை அதிகமாகத் திறந்து வருமானத்தைப் பெருக்குவார்களா, அல்லது, மீண்டும் கடன் வாங்குவார்களா? இப்படி எதிர்காலத் தலைமுறையின் தலையில் கடன்சுமையை ஏற்றுவதுதான் ஆட்சியாளர்களின் கடமையா?

தமிழகம் எதைச் செய்தாலும், அதை உடனே பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. சமூகநீதி, கல்வி வளர்ச்சி எனப் பல அம்சங்களில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருப்பது தமிழகம். ‘இலவசங்களைக் கொடுத்தால் ஓட்டு வாங்கிவிடலாம்’ என்ற மோசமான முன்னுதாரணத்தை தேசத்துக்குக் கொடுக்கும் மண்ணாகத் தமிழகம் இருக்கக்கூடாது. அது தமிழக வாக்காளர்களின் தன்மானத்துக்கும் இழுக்கு.தன்மானத்துக்கு இழுக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism