Published:Updated:

வழிகாட்டினோம்... வரவேற்கிறோம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

வழிகாட்டினோம்... வரவேற்கிறோம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

`குடும்ப உறுப்பினர்களில் ஆண்களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் உள்ளன. அதன்படி பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு' என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பெண்களுக்கான சொத்துரிமையை வலியுறுத்தி முதல்குரல் எழுந்தது தமிழகத்தில்தான். 1929-ல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் `பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாகச் சொத்துரிமைகளும், வாரிசு உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற டாக்டர் அம்பேத்கர் பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி 1950-ல் `இந்து சட்டத்தொகுப்பு மசோதா'வைக் கொண்டுவந்தார். கடும் எதிர்ப்பால் இந்து சட்டத்தொகுப்பு மசோதா நிறைவேற்றப்படாததால் அம்பேத்கர் பதவியிலிருந்து விலகினார். பிறகு 1956-ல் கொண்டுவரப்பட்ட `இந்து வாரிசுரிமைச் சட்டம்' பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது. ஆனால் அதன்படி ஓர் ஆண் சுயமாகச் சம்பாதித்த சொத்தில்தான் பெண்களுக்கு வாரிசுரிமை வழங்கப்பட்டதே தவிர, பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு வாரிசுரிமை வழங்கப்படவில்லை.

1976-ல் கேரளாவும் 1985-ல் ஆந்திராவும் பெண்களுக்குப் பூர்வீகச் சொத்தில் பங்கு வழங்க வகைசெய்யும் சட்டங்களைக் கொண்டுவந்தன. 1989-ல் தமிழக அரசு பூர்வீகச் சொத்தில் பெண்களுக்குப் பங்கு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. மாநிலங்களில் ஏற்பட்ட நடைமுறை தேசிய அளவிலும் பிரதிபலித்தது. 2005-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, `பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமையுண்டு’ என்று இந்து வாரிசுரிமைச் சட்டத்தைத் திருத்தியது. இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளில் முரண்பட்ட நிலையில் தீர்ப்புகள் வெளிவந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் `2005-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் செல்லும். பெண்களுக்குப் பூர்வீகச் சொத்தில் பங்குண்டு' என்று தெள்ளத்தெளிவாகத் தீர்ப்பளித்திருக்கிறது.

பெண்களுக்கு வழங்கப்படும் இந்தச் சொத்துரிமை அவர்களுக்குப் பொருளாதார பலத்தை நிச்சயம் அளிக்கும். அதேநேரம் இதன் பலன்கள் முழுமையாகப் பெண்களுக்கே சென்று சேரவேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால், பெயருக்குப் பெண்களை நிறுத்திவிட்டு ஆண்களே அதிகாரம் செய்யும் சூழல் சில இடங்களில் நிலவுகிறது. இதுபோன்ற நிலை இந்தச் சொத்துரிமையிலும் நடைபெறாமல் இருக்கும்படி பெண்கள் விழிப்புணர்வுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். `சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் சமம்' என்பது உறுதியாகியிருக்கிறது. இதை வெற்றிகரமான நடைமுறையாக மாற்றவேண்டிய பொறுப்பு பெண்களுக்கு இருக்கிறது.

91 ஆண்டுகளுக்கு முன் பெண்களின் சொத்துரிமைக்காக ஒலித்த முதல் குரல் தமிழகத்தினுடையது. 31 ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிய முன்னோடி மாநிலம் தமிழகம் என்ற வகையில் இந்தத் தீர்ப்பைப் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்போம்.