ஜனநாயகத்தையும் நீதியையும் காக்கும் நான்கு தூண்களில் ஒன்று நீதித்துறை. ஜனநாயகத்துக்கு நம்பிக்கையளிக்க வேண்டிய நீதித்துறையின் தீர்ப்பே மக்களின் நம்பிக்கையைக் குலைப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரே பிரச்னையில் வெவ்வேறுவிதமான தீர்ப்புகள் அளிக்கப்படுவது பொதுமக்களிடம் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவை 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற்றதால் அவர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். ‘சபாநாயகர் செய்தது சரிதான். தகுதிநீக்கம் செல்லும்’ என்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். புதுவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் மூவரைத் தானாகவே நியமனம் செய்தது மத்திய அரசு. அந்த நியமனம் செல்லாது என்றார் புதுச்சேரி சபாநாயகர். ‘நியமனம் செல்லும்’ என்று சபாநாயகருக்கு எதிராகத் தீர்ப்பளித்தது அதே உச்சநீதிமன்றம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதமிழகத்தில் ‘முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றவேண்டும்’ என்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளித்தனர். அதனால் அவர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். ஆனால் அதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமி ஆட்சிமீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கட்சிக் கொறடா உத்தரவை மீறி, எதிர்த்து வாக்களித்தார்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 11 அதிருப்தி எம்.எல்.ஏக்கள். ஆளுநரிடம் மனுக்கொடுத்ததற்கே 18 எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்த சபாநாயகர், ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏக்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைச் சுட்டிக்காட்டி தி.மு.க தொடுத்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. அங்கே இரண்டு வருடங்களாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ‘இந்த 11 எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில், சபாநாயகர், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டுமே, ஏன் அவர் எடுக்கவில்லை?’ என்று முதலில் உச்சநீதிமன்றம் கடுமை காட்டியது. இந்த நிலையில், சபாநாயகர் தரப்பில், 11 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்திருப்பதாக விளக்கம் சொல்லப்பட்டது. உடனே “சபாநாயகர் உரிய நடவடிக்கையை எடுப்பார் என நம்புகிறோம். இந்த விஷயத்தில், சபாநாயகருக்கு உத்தரவிடவோ, நடவடிக்கை எடுக்கும்படி காலக்கெடு விதிக்கவோ முடியாது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது” என்று சொல்லியுள்ளது உச்சநீதிமன்றம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சிக்கு எதிராகத் திரும்புவது என்ற ஒரே பிரச்னையில் வெவ்வேறு விதமான தீர்ப்புகள் ஏன்? அதிலும் தமிழகத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள்மீது சபாநாயகர் இரண்டுவிதமான நிலைப்பாடுகளை எடுக்கும்போது அதை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு இல்லையா? ‘சபாநாயகரே உரிய முடிவெடுப்பார்’ என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் என்ன? கட்சிதாவல் தடைச்சட்டத்தின் நிலை என்ன?
இவை அனைத்துமே ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரின் மனதிலும் எதிரொலிக்கும் கேள்விகள்.