Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

ஒன்றாக இணைந்து வீட்டுப்பணிகளைச் செய்யும்போது குடும்பத்தினருடன் ‘குவாலிட்டி டைம்’ செலவிடவும் இயலும்.

ரு காலத்தில் கிராமத்துப் பெண்களை `கூடி வம்பு பேசுபவர்கள்’ என்று சொல்லிக்கொண்டிருந்த சமூகம் நாம். இன்று நம்மிடம் இரண்டு வார்த்தைகள் பேச யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்கும் நிலைக்கு அதே சமூகத்தை நிறுத்தியிருக்கிறது கொரோனா. ‘பொயட்டிக் ஜஸ்டிஸ்’ என்று சொல்லப்படுவது இதுதானோ?

சினிமாவில் மட்டுமே கொஞ்சம் தனிமைக்கும், ஒரு கப் காபிக்கும், சில மணித்துளி மழை ரசிப்புக்கும், இசைக்குமானதாக பால்கனி இருக்கும். யதார்த்தத்தில்... துணி உலர்த்துவதற்கும், கொத்தமல்லி, துளசிச்செடி வளர்ப்புக்கும் மட்டுமே பெரும்பாலும் பயன்படும். இப்போது, அந்த பால்கனிகள்... விளக்கு வைப்பதற்கும், கைகளைத் தட்டுவதற்கும், அக்கம்பக்கத்தினரிடம் நலம் விசாரிப்பதற்குமான ‘சோஷியல் ஸ்பேஸ்’ ஆக மாறிவிட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்படியான பால்கனி டைமில்தான் பக்கத்து ஃபிளாட் பெண்மணி, `வீட்டில் வேலை வளர்ந்துகொண்டே இருக்கிறது, ஓய்வே இல்லை’ என்று புலம்பினார். இத்தனைக்கும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மகன்கள் அவருக்கு உண்டு. `வேலைகளைப் பகிர்ந்தளிக்கலாமே’ என்று ஆலோசனை சொன்னால், `ஆம்பளைப் புள்ளைங்ககிட்ட எப்படி வீட்டு வேலைகளைச் சொல்றது?’ என்று தயங்கினார்.

உண்மையில் கொரோனா ஆண் பெண் பாலின பேதத்தைப் பல கோணங்களில் தகர்த்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். உணவகங்கள் பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் இவ்வேளையில், ஓரளவுக்குச் சமையல் செய்ய தெரிந்த இளைஞர்கள் ஏதோவொன்றை சமைத்து ஆரோக்கியமாக உண்பதைக் காண்கிறோம்.

வளர்பருவத்தில் வீட்டில் அம்மாவும் அப்பாவும் வேலைகளைப் பகிர்ந்துசெய்வதைப் பார்க்கும் பிள்ளைகள், `வீட்டுப் பணியும் நிர்வாகமும் பாலின பேதம் தாண்டியவை' என்று உணர்ந்து கொள்கிறார்கள். யாரையும் எதிர்பார்க்காமல் தங்கள் எதிர்காலத்தை இவர்களால் சமாளிக்க முடியும். அதனால், வேலைகளைக் கூடியமட்டும் வீட்டுக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் பகிர்ந்துகொள்வது பெண்களின் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒன்றாக இணைந்து வீட்டுப்பணிகளைச் செய்யும்போது குடும்பத்தினருடன் ‘குவாலிட்டி டைம்’ செலவிடவும் இயலும். குழந்தைகளுக்கும் புதிதாக ஏதோ கற்றுக்கொள்கிறோம் என்கிற மகிழ்வு இருக்கும். எப்போதும் இறுக்கமாகவே இருக்கும் குடும்பத் தலைவர்கள்கூட தங்கள் `சீரியஸ்’ முகத்தை இந்த நேரத்தில் சற்றே தளர்த்திக்கொள்வது குடும்பங்களில் நெருக்கத்தை மேம்படுத்தும்.

அதோடு, எந்தப் பணிக்கு இடையிலும் பெண்கள் தங்களை மகிழ்வுடன் வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். உங்களுக்கே உங்களுக்கான `மீ டைம்’ என்பதை எப்படியாவது ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தின் நலம் உங்கள் கைகளிலும் உங்கள் மனத்திலும்தான் இருக்கிறது. ஆகவே, உங்களை நீங்களே புதுப்பித்துக்கொண்டு அவர்களையும் புத்துணர்ச்சியுடன் இருக்கப் பழக்குங்கள். அசாதாரணமான இந்த ஊரடங்கு காலத்தை அசாத்திய துணிச்சலுடன்தான் நாம் அனைவரும் கடத்தியாக வேண்டும்.

இந்தக் கடின சூழலிலிருந்து நாம் வெற்றிகரமான ஒரு குடும்பமாக, உடல் மற்றும் உள்ள நலனுடன் வெளிவருவதே நமக்கு இடப்பட்டிருக்கும் ‘டாஸ்க்’. நம் முழு கவனமும் இதில் மட்டுமே இருந்தால் நலம்!

நமக்குள்ளே...