சினிமா
Published:Updated:

புத்தியல்பு வாழ்க்கைக்குத் தயாராவோம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

றுக்கமான கொரோனா வாழ்க்கை ஒவ்வொரு கட்டமாகத் தளர்ந்து கொண்டிருக்கிறது.

புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை அகற்றப்படவிருக்க, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தமிழகத்திலும் அது விரைவில் நடைமுறைக்கு வரலாம். சீனாவிலும் ரஷ்யாவிலும் கொரோனாத் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியாவிலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனாத் தடுப்பூசி பரிசோதனைப் பயன்பாட்டுக்கேனும் வந்துவிடும் என்ற சூழல். இப்படிப் பல தகவல்கள், ‘உயிர்க்கொல்லி கொரோனா’ என்ற ஆரம்பநாள்களின் பதற்றத்தைத் தணிக்கின்றன.

உயிர் பறிக்கும் மர்ம வைரஸாக இருந்த கொரோனாவைத் தடுத்தாட்கொள்ளும் சூட்சுமம் நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவரப் பெறுகிறது. இப்போதும் கொரோனா உயிர்க்கொல்லிதான். ஆனால், அதைத் தள்ளி வைத்துச் செயல்படும் இயல்புக்கு நாம் பழகவேண்டும்.

ஊரடங்கு என ஒட்டுமொத்தமாகத் தொழில் உற்பத்தியை முடக்குவது எந்தப் பிரச்னைக்கும் தீர்வாகாது என்பதை அரசாங்கங்களும் பொதுமக்களும் உணர்ந்துள்ளனர். கல்விக்கூடங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பலர் கூடும் மத விழாக்கள் ஆகியவை தவிர மற்ற இடங்களில், பிற துறைகளில் இயல்பு திரும்ப வேண்டியது அவசியம்... அத்தியாவசியம்!

அதே சமயம், இந்த இயல்பு வாழ்க்கை என்பது கொரோனாவுக்கு முன்பான இயல்பு அல்ல... ‘நியூ நார்மல்’ எனப்படும் புத்தியல்பு வாழ்க்கை. ‘கொரோனா அபாயம் இன்னும் நீங்கவில்லை’ என்ற புரிதலுடன் ஒவ்வொரு தனிமனிதரும் பழக வேண்டிய புத்தியல்பு. முகக்கவசம், சமூக இடைவெளி, சானிட்டைசர், சாத்தியமென்றால் வீட்டிலிருந்தே பணி, ஆன்லைன் கல்வி, மேம்பட்ட பொதுச்சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய புத்தியல்பு.

‘2020-ல் இப்படியெல்லாம் நடக்கும்’ என்று கற்பனைக் கதையோ ஜோசியக் கணிப்போ... எப்படிச் சொல்லியிருந்தாலும், நாம் நம்பியிருக்கவே முடியாத ஒரு வாழ்க்கை முறையைக் கொரோனா நமக்கு வாழப் பழக்கியது. இந்தக் காலகட்டம் நாம் மறந்த தனிநபர் சுகாதாரம் முதல் இயற்கையோடு இயைந்த ‘உணவே மருந்து’ கலாசாரம் வரை மீட்டெடுத்திருக்கிறது. கொரோனா உலகின் முதல் உயிர்க்கொல்லித் தொற்றுமல்ல; இதுவே கடைசித் தொற்றுமல்ல.

1918-ல் உலகை அச்சுறுத்திய ஸ்பானிஷ் ப்ளூ பெருந்தொற்றுக்காலத்திலும் இத்தகைய எச்சரிக்கை நடவடிக்கைகளை மனித சமூகம் கடைப்பிடித்தது மட்டுமல்லாது, அந்த எச்சரிக்கையுணர்வு மூன்று தலைமுறைக்குக் கூட்டுநினைவாகத் தொடர்ந்துவந்தது. ஆனால் அதற்குப்பிறகு அதை நாம் மறந்துவிட்டோம். இனி அது நிகழாமல், கொரோனா குறித்த எச்சரிக்கையுணர்வை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்வோம். இன்றுள்ள தொழில்நுட்ப யுகத்தில் அதற்கான சாத்தியங்கள் அதிகம். அடுத்தடுத்த தலைமுறைகளையும் எச்சரிக்கையுடன் தயார்ப்படுத்துவதும் நாம் மேற்கொள்ள வேண்டிய புத்தியல்பு வாழ்க்கைதான்.