
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
அண்மையில் உலக நாடுகளைத் தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார், இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க். பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய இந்தச் சுவீடன் நாட்டுச் சுட்டிப் பெண்ணின் உரையை உலகமே உற்றுக்கேட்டது.
நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா சபையில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில், “உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப்பருவத்தைக் களவாடிவிட்டீர்கள்” என அந்தச் சுட்டிப் பெண் கிரேட்டா, பருவநிலை மாற்றம் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காத அரசியல்வாதிகள்மீது பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
பதின்வயது பெண்ணின் பருவநிலை மாற்றம் குறித்த அக்கறை உலகை ஆளும் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல்போனது ஆச்சர்யம்தான். தேர்தலுக்குத் தேர்தல் தேன் தடவிய வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், அவற்றை மறந்துவிடும் அரசியல்வாதிகளின்மீது, சொல் அம்பு தொடுத்துள்ளார் கிரேட்டா.
இதே அரங்கில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உரை, ‘நாங்கள் மாத்தி யோசிக்கிறோம்’ என்ற வகையில் இருந்தது. ‘‘நீர்ப் பாசனத்தை மேம்படுத்த ‘ஜல்சக்தி’, சூழலைக் கெடுக்காத சூரியசக்தி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை... எனப் பூமிப் பந்துக்கு, பாதகம் செய்யாத செயல்களைச் செய்துவருகிறோம்’’ என்றெல்லாம் உணர்ச்சிப் பொங்கப் பேசிய உரை, உலகத் தலைவர்களை உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது. ஆனால், சூழலைக் காக்க நம் அரசுகள் எடுத்து வரும் முயற்சிகளைப் பார்க்கும்போது ‘பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைக்கும்’ செயலாகத்தான் உள்ளது. நிலம், நீர் காற்று, ஆகாயம், மண் ஆகியவற்றைப் பஞ்சபூதங்கள் என்று வணங்கும் நம் இந்தியத் திருநாடு, சுற்றுச்சூழலைக் காக்கும் விஷயத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும்தானே!
-ஆசிரியர்