தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

செவிலியர், மருத்துவர்கள் என நோயாளிகளுக்கு உதவி செய்பவர்களையும் நோய் தாக்குகிறது.

த்தாலியின் பெர்காமோ நகரிலிருந்து கிறிஸ்டினா ஹிக்கின்ஸ் என்ற பெண்மணி தன் முகநூல் பக்கத்தில் உலக மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு ஏராளமான உயிரிழப்பு, பொருளிழப்பு, நாடடைப்பு என்று குலைந்துகிடக்கும் இத்தாலியிலிருந்து வரும் எச்சரிக்கையாகவே அவரது கடிதத்தைப் பார்க்கவேண்டியிருக்கிறது. நிலைமையின் வீரியத்தை உணராமலே உலகம் அதை அணுகிக்கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவிக்கும் அவர், இந்த நோயை வெல்வதற்கு ஒரே வழி மக்களின் விழிப்புணர்வுதான் என்று உறுதியாகக் கூறுகிறார்.

ஆம்... இது இன்னொரு போர்தான். இத்தாலி மருத்துவமனைகளின் ஐ.சி.யூக்கள் நிரம்பி வழிகின்றன. தாழ்வாரங்களை ஐ.சி.யூக்கள்போலப் பயன்படுத்தத் தொடங்கும் அளவுக்கு மருத்துவமனைகளில் பெருங்கூட்டம். செவிலியர், மருத்துவர்கள் என நோயாளிகளுக்கு உதவி செய்பவர்களையும் நோய் தாக்குகிறது. அவர்களில் உயிர்ச்சேதம் இல்லை எனினும், குறைந்தபட்சம் ஒரு மாதமாவது அவர்களைப் பணி செய்யவிடாமல் முடக்குகிறது.

`தாமதிக்க இனியும் நேரமில்லை. கூடுமானவரை பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றச் சொல்லலாம். ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையானது நோய் பரவுவதைத் தடுக்க உதவும். மக்கள் அதிகம் கூடும் பிறந்த நாள் விழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாதாரண ஜலதோஷக் காய்ச்சல்தான் என்றாலும்கூட வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்’ என்று அறிவுரை தருகிறார் கிறிஸ்டினா.

மருத்துவக் காப்பீடு இல்லாத பெற்றோரை அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். வளைகுடா நாடுகள் அங்கிருந்து இந்தியர்கள் வெளியேறவோ, உள்நுழையவோ தடை செய்திருக்கின்றன. உலக சுகாதார நிறுவனம், `பெரும் கொள்ளை நோய்’ என்று கோவிட்-19 பிரச்னையை அறிவித்துவிட்டது. நாம் இருப்பது இத்தாலியில் அல்ல; இந்தியாவில்தான் என்கிற அலட்சியம் வேண்டாம். இங்கேயும் ‘கோவிட்-19 வைரஸ்’ தன் கணக்கைத் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 76 வயது முதியவர் பலியாகியிருக்கிறார். நாமும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய தருணம் இது.

இந்தச் சூழலில் ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைப் பாதுகாப்பு முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். உணவருந்தும் முன் கைகளை நன்றாக சோப் கொண்டு கழுவுதல், பொது இடங்களில் துப்பாமல் இருத்தல், இருமும் போதும் தும்மும் போதும் நாப்கின் அல்லது கர்ச்சீப் கொண்டு முகத்தை மூடுதல், பயணங்களைத் தவிர்த்தல், பெரும் கூட்டம் சேரும் இடங்களுக்குக் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோரை அழைத்துச் செல்லாமல் இருத்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், குழந்தைகளிடம் பள்ளியிலும் சுத்தம் பேண அறிவுறுத்துதல், கழிவறைகளைச் சுத்தமாகப் பராமரித்தல் என்று ஒவ்வொருவரும் தனக்கான வெளியில் சுத்தமாக இருப்பது நோயை விரட்ட உதவும்.

தேவையற்ற அச்சத்தை ஒதுக்கும் அதே வேளையில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம். வருமுன் காப்போம். விலைமதிப்பற்ற உயிர்களைக் கொள்ளை நோய்க்கு பலி தர வேண்டாமே!

நமக்குள்ளே...