Published:Updated:

இது எச்சரிக்கைக்கான நேரம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

இது எச்சரிக்கைக்கான நேரம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

‘கொரோனா பாதிப்பு நம்மை விட்டு முற்றிலும் நீங்கவில்லை’ என்பதை நாம் மறந்துவிட்டோம். திருமண விழாக்கள், அரசியல் கூட்டங்கள், கடற்கரைகள், வணிக வளாகங்கள் என எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிந்தவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. சானிட்டைசர் பயன்படுத்துவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. பெரும்பாலான மக்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவில்லை. ‘எல்லாம் முடிந்தது’ என்று அலட்சியத்துடன் திரியும் நமக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது சூழல். ஆம்! தமிழகத்தில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதே அலட்சியத்துடன் நாம் இருந்தால் சென்ற ஆண்டு அளவுக்கு நிலைமை மோசமாகவும் கூடும்.

மகாராஷ்டிராவில் கொரோனாத் தொற்று இருந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியதும், மும்பைப் புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட நெரிசலான போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி கொடுத்ததுமே இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்கக் காரணங்கள் என்று கருதப்படுகின்றன. மகாராஷ்டிரா போலவே பாதிப்பு அதிகமுள்ள பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் ஏதோ ஒரு தேர்தலை இந்த இடைப்பட்ட நாள்களில் சந்தித்தன. விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும் நாம் எவ்வளவு கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை இது. அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பொதுமக்கள்வரை உறுதியாகப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதே கொரோனாவை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி.

கொரோனாவின் தீவிரத்தைத் தணிக்க மீண்டும் ஓர் ஊரடங்கு தீர்வாக இருக்க முடியாது. அதற்கு நாம் கொடுக்கும் சமூக, பொருளாதாரரீதியிலான விலை மிக அதிகம். தடுப்பூசியின் விலை நிச்சயம் அதைவிடக் குறைவு. உலகிலேயே அதிகம் பேருக்குத் தடுப்பூசி போட்டதில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. எனினும், மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவிகிதம் பேருக்கு மட்டுமே அது கிடைத்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தியதைப் போல இரண்டு மடங்கு தடுப்பூசிகள் இடைப்பட்ட காலத்தில் இங்கிருந்து உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அதேநேரம் நம் தேவைகளையும் கவனிக்க வேண்டும் அல்லவா?

தடுப்பூசிமீதான கட்டுப்பாட்டைத் தன் கையில் வைத்துக்கொண்டு, எல்லா மாநிலங்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க மத்திய அரசு முயல்வது சரியான நடைமுறை அல்ல. எங்கே பாதிப்பு அதிகம் உள்ளதோ, அந்தப் பகுதிகளுக்கு அதிக தடுப்பூசி கொடுப்பதே நோய்த்தடுப்புக்கான வழிமுறை. அமெரிக்காவில் வாகனங்களில் சென்று அப்பார்ட்மென்ட்கள், ஷாப்பிங் மால்களில் நடமாடும் தடுப்பூசி முகாம் நடத்துகிறார்கள். இப்படித் தடுப்பூசியைப் பரவலாக்கி, தேவை உள்ளவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். ‘இலவசத் தடுப்பூசி தருவோம்’ என வாக்குறுதி கொடுத்த மத்திய, மாநில அரசுகள் அதை மறந்தே விட்டன. இப்போதாவது அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தடுப்பூசியும் பாதுகாப்பு வழிமுறைகளுமே கொரோனாவைத் தடுக்கும் ஆயுதங்கள் என்பதை உணர்ந்து, அலட்சியத்தைக் கைவிட்டு எச்சரிக்கையுடன் நடந்துகொள்வோம்!