Published:Updated:

பள்ளித்தலமனைத்தும் தோட்டம் செய்குவோம்!

பள்ளித்தலமனைத்தும் தோட்டம் செய்குவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பள்ளித்தலமனைத்தும் தோட்டம் செய்குவோம்!

தலையங்கம்

ன்று ஒட்டுமொத்த உலகமும் கவனம் குவித்திருக்கும் ஒரு விஷயம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த உலகமும் சந்திக்கும் சவால் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான். நாம் வாழும் பூமியைக் காப்பாற்றினால்தான், பூமியும் நம்மைக் காப்பாற்றும். இதை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது; குறிப்பாக நம் எதிர்காலத் தலைமுறைக்கு.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விபரீதங்களை, தனி ஒருத்தியாக எதிர்த்து நின்று குரல் எழுப்பிவரும் ஸ்வீடன் சிறுமி க்ரெட்டா துன்பெர்க், சில நாள்களுக்கு முன்னர் அறுபது நாட்டுத்தலைவர்கள் குழுமியிருந்த ஐக்கிய நாடுகளின் சபைக்கூட்டத்தில், ‘`நீங்கள் எங்கள் குழந்தைப் பருவத்தையும் கனவுகளையும் களவாடிவிட்டீர்கள்’’ என்று நேரடியாகவே குற்றம் சுமத்தினார். இனியாவது பாதுகாப்பான பூமியை நாம் எதிர்காலச் சந்ததியினருக்குக் கையளிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலைப் பற்றிப் புரிந்துகொள்ள, குழந்தைகள் இயற்கையைப் பற்றி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதைச் சாத்தியப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஒரு வழிகாட்டல் அறிக்கையை அனுப்பியிருக்கிறது. ‘அரசுப் பள்ளியாக இருந்தாலும் சரி, தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி... எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்யக்கூடிய சமையல் தோட்டங்களை அமைக்க வேண்டும்’ என்று குறிப்பிடுகிறது. ‘விதைகள், செடிகள், உரம் போன்றவற்றுக்கு விவசாயப் பல்கலைக்கழகங்கள், கிரிஷி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மாநில விவசாயத்துறை ஆகியவை உதவ வேண்டும்’ என்றும் சொல்கிறது அந்த அறிக்கை. இந்த முயற்சி, உணவில் ஊட்டச்சத்தைக் கூட்டுவதற்கு மட்டுமல்ல... விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறது மத்திய அரசு.

ஆங்காங்கே தன்னார்வத்துடன் ஒரு சில பள்ளிக்கூடங்களில் ஏற்கெனவே இத்தகைய முயற்சிகள் நாடுமுழுக்க முன்னெடுக்கப்பட்டு அவை வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகின்றன. குறிப்பாக தமிழகப் பள்ளிக்கூடங்களில் இதன் வேகம் சற்றே அதிகம். அதிலும், ஈரோடு மாவட்டத்திலிருக்கும் சில பள்ளிக்கூடங்களில் விவசாயச் சங்கங்கள் உதவியுடன் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் நல்விளைவாக அங்கே வீட்டுத்தோட்டங்களும் பெருக ஆரம்பித்திருக்கின்றன. ‘பள்ளிக்கூடத்தில் பதியம்போடக் கற்றுக்கொடுத்தால், அது வீட்டிலும் விளையும்’ என்பதைக் கண்கூடாகக் கண்டுணர்ந்து, பாராட்டிப் பதிவு செய்திருக்கிறது ‘பசுமை விகடன்.’

ஏற்கெனவே, இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது, இயற்கையின் மீது இந்த அரசு கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டியுள்ளது. அதேபோல் ‘பள்ளிக்கூடத்தில் சமையல் தோட்டம்’ என்னும் மத்திய அரசின் முயற்சி வெற்றிபெற, நாமும் நம் பங்களிப்பைச் செலுத்துவோம்; செலுத்தவேண்டும்.