Published:Updated:

இரண்டு தேர்தல்கள்... இரண்டு செய்திகள்!

இரண்டு தேர்தல்கள்... இரண்டு செய்திகள்!
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு தேர்தல்கள்... இரண்டு செய்திகள்!

தலையங்கம்

இரண்டு தேர்தல்கள்... இரண்டு செய்திகள்!

தலையங்கம்

Published:Updated:
இரண்டு தேர்தல்கள்... இரண்டு செய்திகள்!
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு தேர்தல்கள்... இரண்டு செய்திகள்!

ரியானா, மகாராஷ்டிரா என்ற இந்தியாவின் இரு முக்கிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளும், தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் இரண்டுவிதமான உண்மைகளை மக்கள்முன் வைத்துள்ளன.

ஹரியானாவிலும் மகாராஷ்டிராவிலும் பாரதிய ஜனதா கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது என்றாலும், இரண்டு மாநிலங்களிலுமே சென்றமுறை வென்றதைவிடக் குறைவான தொகுதிகளையே வென்றுள்ளது. இன்றைய நிலையில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக இருக்கும் காங்கிரஸ் போன்ற கட்சிகளின்மீது மக்களுக்கு முழுநம்பிக்கை வரவில்லை என்பதே பா.ஜ.க வெற்றிபெறக் காரணம். அதேநேரத்தில் பா.ஜ.க மீதும் அபரிமிதமான நம்பிக்கை இருந்திருந்தால் மக்கள் இன்னும் அமோக வெற்றியைப் பரிசளித்திருப்பார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டாம் முறையாக மோடி ஆட்சி ஏற்றதற்குப் பிறகு நாடு முழுக்க நிலவும் பொருளாதார மந்தநிலை, அதைச் சரிசெய்வதற்கான முழுமையான திட்டங்களை மத்திய அரசு முன்வைக்காதது, பிரச்னைகளைச் சரிசெய்யாமல் முன்னாள் பிரதமர்கள் நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரை குற்றச்சாட்டுகளை வீசும் அவலம், நீதித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி போன்ற சுயேச்சையான அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படாத நிலை போன்றவை மோடி அரசின்மீது வைக்கப்படும் விமர்சனங்கள். இவை இந்தத் தேர்தல்களில் பிரதிபலித்தது பா.ஜ.க-வின் வெற்றி சதவிகிதம் குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.

அதேநேரத்தில் இத்தனை விமர்சனங்களைத் தாண்டி பா.ஜ.க அதிக இடங்களைப் பெற முடிகிறது என்றால், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்மீது மக்களுக்கு முழுநம்பிக்கை வரவில்லை என்றே அர்த்தம். தலைமைப்பொறுப்பை வகிப்பதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் தொடங்கி பல காரணங்கள் காங்கிரஸ் தோல்வியின் பின்னால் உள்ளன. எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை என்பதை உணர்ந்து இனியாவது காங்கிரஸ் தன் தவறுகளைக் களைந்து மீண்டுவர முயல வேண்டும்.

தமிழக இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது. அதனாலேயே மக்கள் தங்களுக்கு மாபெரும் அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள் என்று அ.தி.மு.க. மகிழவேண்டியதில்லை. ஒருசில விதிவிலக்குகளைத் தவிர பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே வெல்வதுதான் வழக்கம். எனவே ‘மக்கள்தான் இடைத்தேர்தலில் வாக்களித்துவிட்டார்களே’ என்று மேலும் மேலும் தவறு செய்யாமல், மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

தி.மு.க கூட்டணி ஏற்கெனவே வெற்றிபெற்ற இரு தொகுதிகளை அ.தி.மு.க.விடம் பறிகொடுத்ததில் இருந்தே, ‘தங்கள்மீது மக்களுக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை’ என்பதைத் தி.மு.க. உணர வேண்டும். இதை உணராமலே ‘அ.தி.மு.க ஆட்சி அடுத்த மாதம் கவிழ்ந்துவிடும்’, ‘அதற்கடுத்த மாதம் கவிழ்ந்துவிடும்’ என்றே ஸ்டாலின் ஆருடம் கூறிவருவதில் எந்த அர்த்தமும் இல்லை. ‘அதிகார பலம், பணப்பட்டுவாடா ஆகியவற்றால்தான் அ.தி.மு.க. வென்றது’ என்று தி.மு.க. கூறினாலும், இரண்டு கட்சிகளுமே இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். பணப்பட்டுவாடா செய்து தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரே கையும் களவுமாகப் பிடிபட்டார்.

‘மக்கள்நலனில் அக்கறையில்லாத கட்சிகளைத் தூக்கியெறிய மக்கள் தயங்க மாட்டார்கள்’ - இரண்டு கட்சிகளுமே தெரிந்துகொள்ள வேண்டிய மகத்தான உண்மை இது.