‘அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரியபொருள்களைக் காட்சிப்படுத்துவதற்காக சிவகங்கை மாவட்டம், கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என்று அறிவித்து மகிழ்ச்சியைக் கூட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கீழடி மட்டுமல்ல... மாமல்லபுரம், அரிக்கமேடு, அரியலூர், ஆதிச்சநல்லூர் எனத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வரலாற்றுப் பொக்கிஷங்கள் நிறைந்தே கிடக்கின்றன. அங்கெல்லாம் அகழாய்வுப் பணிகளைத் தொடர்வதுடன், ஆங்காங்கே அருங்காட்சியகங்களை உருவாக்கிப் பராமரிப்பதும் மிகஅவசியம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஐரோப்பாவின் பெரும்பாலான நகரங்களில் திரும்பியபக்கமெல்லாம் அருங்காட்சியகங்கள்தான். ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் மட்டுமே 300க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள். நாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகமும், எழுத்தறிவும் இலக்கியத்திறமும் கொண்டவர்களாக இருந்திருக்கிறோம். நமக்கு வரலாறு இருக்கிறதே தவிர, அதைப் பாதுகாக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. வரலாற்றுச் சின்னங்களின் மீது பெயர்களைக் கிறுக்குவது தொடங்கி, அரிக்கமேடு உள்ளிட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மணல்கொள்ளைவரை பல அத்துமீறல்களை நிகழ்த்துகிறோம்.
ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஆப்பிரிக்காவில் சில இடங்களில் கிடைத்துள்ளன. ஆனால், அதற்கும் முன்பாக ஆதிமனிதன் இந்தியாவில் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்குச் சாட்சி சொல்லும் கல் ஆயுதங்கள் மற்றும் எச்சங்கள் திருவள்ளூர் மாவட்டம் குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் கிடைத்துள்ளன. இதன் காலகட்டம் மூன்று லட்சம் ஆண்டுகள்வரை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த இடங்கள் எல்லாம் துளிகூடப் பாதுகாப்பின்றி அழிந்துகொண்டிருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்கிறோம். ஆனால், அந்தப் பெருமையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் இந்த அகிலத்துக்கும் கடத்துவதற்கு நம்மிடம் இருக்கும் ஆதாரங்களைக் காக்கத் தவறுகிறோம். மாநில அரசு தற்போதுதான் விழித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது. உரிய நிதியையும் ஆதரவையும் பெறுவதற்காக மத்திய அரசிடம் குரல் எழுப்ப வேண்டியதும் அவசியம்.
நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தொல்பொருள்களின் முக்கியத்துவத்தை மக்களின் மனதில் பதிப்பதோடு, அருங்காட்சியகங்கள் போன்றவற்றைக் காக்கவும் பராமரிக்கவுமான கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும். ஒரு காலத்தில் மாமல்லபுரத்தின் அனைத்துப் புராதனச் சின்னங்களும் கேட்பாரற்றுதான் கிடந்தன. தற்போது அவை வேலியிடப்பட்டு, சுற்றுப்புறம் மெருகூட்டப்பட்டு, பார்வையாளர் கட்டணமும் வசூலிக்க ஆரம்பித்த பிறகு, தன்னுடைய பராமரிப்பையும் பொலிவையும் தானே உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டன அந்தச் சின்னங்கள்!
‘கடந்தகாலத்தை அறிவதில்தான் நம் நிகழ்காலமும் எதிர்காலமும் இருக்கின்றன’ என்பதை அனைவரும் உணர்வோம்!