Published:Updated:

நம்பிக்கை வழிகாட்டும் இந்தியா!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்பு ஓராண்டுக்கு முன்பு கண்டறியப்பட்டபோது, உலகெங்கும் அச்சம் நிலவியது. 138 கோடி மக்கள் வாழும் பெரிய தேசம், நகரங்களில் நிலவும் மக்கள் நெரிசல், பெருநகரங்களைத் தாண்டி வலுவான சுகாதாரக் கட்டமைப்பு இல்லாத சூழல்... இதனால் இந்தியாவில் கொரோனாத் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என சர்வதேச சமூகம் பயந்தது. ‘மாபெரும் மானுடப் பேரழிவு நிகழவுள்ளது’ என்றெல்லாம் சர்வதேச மீடியாக்கள் விமர்சனம் செய்தன. ஆனால், இந்தியா குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்த நேரத்தில் சூழல் எப்படி இருக்கிறது?

உலகெங்கும் சுமார் 10 கோடிப் பேரை கொரோனா தாக்கியுள்ளது. அவர்களில் நான்கில் ஒருவர் அமெரிக்கர். உலகெங்கும் 21 லட்சம் பேர் இறந்துள்ளனர். அவர்களில் ஐந்தில் ஒருவர் அமெரிக்கர். மேற்கத்திய நாடுகளும் அமெரிக்கா போல தடுமாறுகின்றன. இந்தியாவை ஆரம்பத்தில் எச்சரித்த அதே சர்வதேச மீடியாக்கள் அமெரிக்காவின் இயலாமையையும் பிரிட்டனின் நிலையையும் விரக்தியுடன் விவரிக்கின்றன. பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கியுள்ளதால் பொதுமுடக்கம் மீண்டும் அமலுக்கு வந்திருக்கிறது.

உலகமே பயந்தது போன்ற பாதிப்புகள் இதுவரை இல்லாமல் இந்தியா தப்பித்துவிட்டது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், மக்கள்தொகை அடிப்படையில் குறைவான பாதிப்பைச் சந்தித்தது இந்தியாவே! ஆயிரத்தில் ஏழு பேருக்கு மட்டுமே நோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில்தான் இறப்பு விகிதம் மிகக் குறைவு. இப்போது நான்கைந்து மாநிலங்கள் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் நோய்த்தொற்று பெரிதும் குறைந்துள்ளது. ஒருவேளை மற்ற நாடுகளைப் போல இரண்டாவது அலை தாக்கினாலும், அதை எதிர்கொள்ளும் வல்லமையுடன் முன்களப் பணியாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்த நேரத்தில் தடுப்பூசிகளும் அறிமுகமாகியுள்ளது ஆறுதல். முதல் வாரத்திலேயே 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட்டு சாதனை புரிந்துள்ளது இந்தியா. இந்தத் தடுப்பூசிகள் குறித்து ஒரு பக்கம் அச்சம் நிலவினாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படுவதும் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைவு. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசி பற்றி நம்பிக்கை அளிக்கும் ஆய்வு ஒன்று, புகழ்பெற்ற ‘லேன்செட்’ இதழில் வெளிவந்துள்ளது. எனவே, ‘இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளும், நோய் எதிர்ப்பணுக்களை உடலில் உருவாக்கும் திறனுள்ளவை’ என இதுபோன்ற சர்வதேச ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

‘தனக்கு மிஞ்சியே தானதர்மம்’ என்பார்கள். ஆனால், தடுப்பூசி விஷயத்தில் இந்தியா அப்படி இல்லை. பங்களாதேஷ், மியான்மர், பூட்டான், நேபாளம், மாலத்தீவுகள் எனப் பல நாடுகளுக்கு இந்தியா சுமார் 1 கோடித் தடுப்பூசிகளை இலவசமாகக் கொடுத்துள்ளது. இந்தியாவில் தயாராகும் கொரோனாத் தடுப்பூசிகளுக்காக இன்னும் பல நாடுகள் காத்திருக்கின்றன. ‘இந்தியாவே உலகின் தடுப்பூசித் தலைநகரம்’ என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

உலகை அச்சுறுத்தும் எந்தப் பிரச்னைக்கும் அமெரிக்காவோ, மேற்கத்திய நாடுகளோதான் தீர்வு தேடும் என்ற சூழல் இதுவரை இருந்தது. ஆனால், கொரோனா நோய்த்தொற்றை சமாளிக்கும் விஷயத்தில் உலகத்துக்கே வழிகாட்டியாக ஒளிர்கிறது இந்தியா என்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயம். அடுத்த குடியரசு தினத்தை இந்தியா கொண்டாடும்போது, உலகெங்கும் கொரோனா அச்சம் நீங்கியிருக்கும். அதில் இந்தியாவின் பெரும்பங்கு நிச்சயம் இருக்கும்.