Published:Updated:

தர்மம் இல்லை... சங்கடம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தர்மம் இல்லை... சங்கடம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசுக்குப் பெரிய தர்மசங்கடமாக இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு மக்கள் இயல்புக்குத் திரும்பிவரும் நிலையில், இந்த விலை உயர்வு பெருஞ்சுமையாக இறங்கியிருக்கிறது.

‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததே தற்போதைய விலை உயர்வுக்குக் காரணம்’ என்று மத்திய அரசு சொல்கிறது என்றாலும், இதில் மத்திய அரசுக்குப் பெரும்பங்கு இருப்பதை மறுக்க முடியாது. 65 டாலர் விற்ற கச்சா எண்ணெய் விலை, கடந்த ஏப்ரலில் கொரோனா காரணமாக எரிபொருள் பயன்பாடு குறைந்து, 20 டாலருக்கும் குறைவாக இறங்கியது. நியாயமாக அந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை பாதியளவுக்கும் கீழே குறைந்திருக்க வேண்டும். மாறாக அந்த நாள்களில் பெட்ரோல் மீதான சுங்க வரியில் 13 ரூபாயும், டீசல் மீதான சுங்கவரியில் 16 ரூபாயும் உயர்த்தியது மத்திய அரசு. இதனால் விலைக்குறைவின் பலன் நேரடியாக மக்களுக்குக் கிடைக்கவில்லை, அரசு கஜானாவுக்குத்தான் சென்றது. இருந்தாலும், கொரோனா காரணமாக அரசுக்கு வருமானம் குறைந்து செலவுகள் அதிகரித்திருந்த கடினமான சூழலில் இதைச் செய்ததைக்கூட நியாயப்படுத்தலாம்.

தற்போது உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், தேவை அதிகரித்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. முன்பு உயர்த்திய வரியை இப்போது குறைக்காமல், இந்த விலை உயர்வுச் சுமையையும் கூடுதலாக மக்கள் தலையிலேயே ஏற்றியுள்ளது அரசு. போதாக்குறைக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகப் புதிதாக ஒரு செஸ் வரியும் பெட்ரோலியப் பொருள்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது.

‘பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கின்றன. அரசு கையில் ஒன்றும் இல்லை’ என்று சமீபத்தில் நிதியமைச்சர் கூறிய விளக்கம் அபத்தமானது. எண்ணெய் நிறுவனங்கள் யார் கையில் இருக்கின்றன, மத்திய அரசின் கைப்பிள்ளைகள்தானே அவை?

பெட்ரோல் விலையில் சுமார் 54 ரூபாயை மத்திய, மாநில அரசுகள் வரியாகப் பெறுகின்றன. இந்த வரிகளைச் சற்றுக் குறைத்தாலே விலையைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். சில மாநிலங்கள் வரியைக் குறைத்துள்ளன. மத்திய அரசும், தமிழக அரசும் இதைப் பின்பற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்தால், வரி கட்டுக்குள் வந்து விலை கணிசமாகக் குறையும். மாநில அரசுகளைக் கைகாட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்ளாமல், மத்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயம் இது.

வரி என்பது அரசை நகர்த்தும் அச்சாணி. அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. என்றாலும், இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வது நேரடியாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். அதனால் போக்குவரத்துச் செலவு அதிகமாகும். அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கும். இது நடுத்தர மற்றும் எளிய மக்களை வதைக்கும்.

இது தர்மம் இல்லை... சங்கடமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism