Published:Updated:

அணை அபாயத்துக்கு அணை கட்டுங்கள்!

அணை
பிரீமியம் ஸ்டோரி
News
அணை

நதிகளைப் பொறுத்தவரை கடைமடை உரிமையை யாராலும் தடுக்கமுடியாது.

நீண்டகாலமாக நீடித்துவரும் காவிரிப்பிரச்னையே முழுமையாகத் தீர்ந்தபாடில்லை. முறைப்படி தமிழகத்துக்கு வரவேண்டிய நீர், காவிரி ஆணையம் உருவாக்கப்பட்ட பின்னரும் உரியகாலத்தில் வருவதில்லை. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றுப்பிரச்னையும் தமிழகத்துக்குத் தலைவலியைத் தர ஆரம்பித்துள்ளது. ‘தென்பெண்ணையின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கமுடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மிகமுக்கிய நீராதாரம் தென்பெண்ணை. இதை நம்பித்தான் அங்கே பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், தென்பெண்ணையின் துணை ஆறான மார்க்கண்டேயா ஆற்றின் குறுக்கே 87 கோடி ரூபாய் திட்டமதிப்பில் அணையைக் கட்டுகிறது கர்நாடகா. இதன் கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. கூடவே, தென்பெண்ணையாற்றில் 8 அடி விட்டம் கொண்ட குழாய்களைப் பதித்து, ராட்சத நீரேற்றிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி, கோலார் மாவட்டத்தில் உள்ள 160 குளங்களை நிரப்புவதற்கும், எல்லமல்லப்பா குளத்தில் 284 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. இதெல்லாம் தமிழகத்துக்குப் பேராபத்தாக முடியும் என்பதால்தான், 2018-ல் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது தமிழக அரசு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1892-ல் மைசூர் சமஸ்தானம் - சென்னை மாகாணம் இடையே போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி, சென்னை மாகாணத்தின் நீராதாரங்களை பாதிக்கும் வகையில் மைசூர் சமஸ்தானம் நீர்த்தேக்கத் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என மாநிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் ஒப்பந்தங்கள் உயிரோடுதான் உள்ளன. இருந்தும்கூட உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளது.

இதைவிடக் கொடுமை, ‘புதிய அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை. இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமும் இல்லை’ என்றெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருப்பதுதான். ‘தீர்ப்பாயம் அமைக்க வேண்டுமெனத் தமிழ்நாடு ஏன் கோரிக்கை வைக்கவில்லை’ என்றும் பிரச்னையை வேறுபக்கம் திருப்பிவிடும் வேலையையும் செய்துள்ளது மத்திய அரசு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘தீர்ப்பாயம் என்பது, காவிரிப் பிரச்னைபோல நீண்டகாலத்துக்கு இழுத்தடிப்பதற்குத்தான் உதவும். எனவே, உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை உறுதிசெய்ய, 3 அல்லது 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்வதுதான் சரியாக இருக்கும்’ என்கிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

நதிகளைப் பொறுத்தவரை கடைமடை உரிமையை யாராலும் தடுக்கமுடியாது. இதுதான் நியாயம், தர்மம், உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சட்டம். எனவே, நம் உரிமை பறிபோகாமல் தடுக்க சட்டப்போராட்டத்தை உளப்பூர்வமாகத் தமிழக அரசு தொடங்க வேண்டும். அதற்கு ஒட்டுமொத்தத் தமிழகமும் துணை நிற்கவேண்டும்!