கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை விதித்தது. சுற்றுச்சூழல்மீது அக்கறைகொண்டு அறிவித்த இந்தத் தடை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து வருகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ‘போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு...’ என்பதுபோல முன்பைவிட இப்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு வேகமாகப் பரவிவருகிறது. ‘கள்ளச்சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை’, ‘பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்’ போன்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. கடுமையான விதிமுறைகளையும் தண்டனைகளையும் அறிவித்தாலும், மக்கள் பங்கேற்பு இல்லாமல் எந்தச் சட்டமும் திட்டமும் வெற்றி பெறாது என்பது கண்கூடு. அண்டை மாநிலமான ஆந்திராவிலுள்ள அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணன் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக அனந்தபூரை அறிவித்து, ஒரு கிலோ பிளாஸ்டிக்கைக் கொடுத்தால் இரண்டு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதிலுமிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. நடிகையும் ஆந்திர மாநிலச் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா தன் தொகுதியில் பிளாஸ்டிக்கை ஒழிக்க அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்தப் பசுமை முயற்சி தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், `பிளாஸ்டிக்கைக் கொடுப்பவர்களுக்கு அரிசி வழங்கும் விழிப்புணர்வு விழா’வை நடத்திவருகின்றனர். இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு, இந்த நல்ல திட்டத்தை விரைவாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறையும்; மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் அரக்கனின் தீமை குறித்த விழிப்புணர்வு பெருகும்.
-ஆசிரியர்
