Published:Updated:

நடவடிக்கை வேண்டும்!

பசுமை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை விகடன்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

நடவடிக்கை வேண்டும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

Published:Updated:
பசுமை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை விகடன்

‘`வேளாண் இடுபொருள்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், விளைபொருள்களின் விலையோ சரிந்துகொண்டே இருக்கிறது. இது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு’’ - இப்படி ஒரு செய்தியை அதிரடியாகப் பேசுவதில் வல்லவரான மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வருத்தத்துடன் பகிர்ந்திருக்கிறார். “நான் ஒரு விவசாயி” என்று அடிக்கடி சொல்லிவரும் அமைச்சர், யதார்த்த நிலையைப் பட்டவர்த்தனமாகப் படம்பிடித்துள்ளார். ஆம். ரசாயன உரம், இயந்திரங்களுக்கான எரிபொருள் விலை என வேளாண் தேவைக்கான அனைத்துப் பொருள்களின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது.

இந்த நிலையில், விவசாயிகளின் இந்தப் பளுவைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் எதுவும் வேகமெடுக்கவில்லை என்பதுதான் வேதனை. ‘ரசாயன உரப் பயன்பாட்டைக் குறைப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் ஜீரோபட்ஜெட் இயற்கை வேளாண்மை முறை ஊக்கப்படுத்தப்படும்’ என்று சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

‘கரும்பிலிருந்து எத்தனால் எடுத்து மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தினால், எரிபொருளுக்காக பிற நாடுகளிடம் கையேந்தி நிற்கும் தேவையிருக்காது. கரும்பு விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கும்’ என்று ஆண்டாண்டுக் காலமாக விவசாயிகள் குரல் கொடுத்துவருகின்றனர். எந்த ஆட்சியாளர்களின் காதிலும் அந்தக் குரல் விழவே இல்லை.

இப்படிக் கையில் வெண்ணெயாக நிறைய தீர்வுகள் இருக்கின்றன. ஆனால், நெய்க்கு அலைவதாகத்தான் இருக்கின்றன மத்திய அரசின் செயல்பாடுகள். விவசாயம் மற்றும் விவசாயிகள்மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் சூழலை உணர்ந்து உடனடியாக, உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism