நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

திரும்பப் பெற வேண்டும்!

பசுமை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை விகடன்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

மேடைக்கு மேடை ‘‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி முழங்கிவருகிறார். ஆனால், ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்’ என்பதுபோல இருக்கிறது அண்மையில் வெளிவந்த மத்திய அரசின் அறிவிப்பு. அதாவது, ‘விவசாய நகைக்கடன் வட்டி 9 சதவிகிதமாக உயர்த்தப்படும்; இதுவரை வழங்கப்பட்ட 3 சதவிகித மானியமும் ரத்து செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பொதுத்துறை வங்கிகளில் விவசாயத்துக்கான நகைக்கடன் 7 சதவிகித வட்டியில் தரப்படுகிறது. ஓராண்டுக்குள் கடனைச் செலுத்தினால், அதற்கு 3 சதவிகித மானியம் கொடுக்கப்படும். எனவே, 4 சதவிகிதம் வட்டி கட்டினால் போதும். பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் பயிர்ச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கைகொடுப்பதாக இருந்தது இந்தத் திட்டம்.

நகையை அடமானம்வைத்துச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, அனைத்தும் சாதகமாக அமைந்தால்தான் அவர்களால் உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். இயற்கை இடர்ப்பாடுகள், விலை வீழ்ச்சி ஆகியவை ஏற்படும்போது நிச்சயம் நகைக்கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் ஏற்படும். ஆகையால்தான், `விவசாயத்துக்கான நகைக்கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும்’ என்று விவசாயிகளும் விவசாய அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றன. இந்நிலையில், இருப்பதையும் பறித்துக்கொண்டு அவர்கள்மீது மேலும் இடியை இறக்கியுள்ளது மத்திய அரசு.

‘விவசாய நகைக்கடன் திட்டத்தை, விவசாயம் செய்யாதவர்கள் மோசடி செய்து கடன் பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை முறைப்படுத்தவே மானியம் ரத்து, வட்டி உயர்வு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம்’ என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எதில்தான் மோசடி இல்லை. அவற்றையெல்லாம் கண்டறிந்து உரியவர்களுக்கு மட்டுமே சலுகைகள் சென்று சேர்வதை உறுதிப்படுத்துவதுதான் ஓர் அரசின் தலையாய வேலை. அதை விட்டுவிட்டு, ‘மூட்டைப்பூச்சிகளுக்கு பயந்து வீட்டையே கொளுத்தும் வேலையை’ ஓர் அரசே செய்வது ஆபத்தானது. அப்பாவி விவசாயிகளை பாதிக்கும் அறமற்ற இந்த அறிவிப்பை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

- ஆசிரியர்