இந்நிலையில், `விவசாயக்கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு’ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியிருக்கிறது மத்திய அரசு. ஏற்கெனவே கடனைக் கட்டமுடியாமல் விவசாயிகளின் தற்கொலைகள் துயரத்தொடர்கதையாக இருக்கும்சூழலில், வட்டி அதிகரிப்பு என்பது துயரச்சுமையை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
இப்போதுள்ள நிலவரத்தின்படி பொதுத்துறை வங்கிகளில் விவசாயத்துக்கான நகைக்கடன் 7 சதவிகித வட்டியில் தரப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடனை திரும்பச் செலுத்தினால் 3 சதவிகிதம் மானியம் உண்டு. 4 சதவிகித வட்டியைக் கட்டினால் போதும். இது விவசாயிகளுக்குப் பேரளவு பயன் தருவதாக இருந்தது. பயிர் விதைக்கும்போது கடன் வாங்கி, அறுவடை முடிந்தவுடன் கடனை அடைத்து, நகையை மீட்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இதனால், அதிகம் பலன் பெறுவது இந்திய விவசாயத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள குறு, சிறு விவசாயிகள்தான். இப்போது வட்டியை 9 சதவிகிதம் என உயர்த்தியிருப்பதோடு, 3 சதவிகித மானியத்தையும் ரத்து செய்திருக்கிறது மத்திய அரசு.
`விவசாயிகளுக்கான சலுகையை விவசாயம் செய்யாத தனி நபர்களும் நிதி நிறுவனத்தினர் பலரும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். `விவசாயி’ என்கிற பெயரில் கடன்களை வாங்கி, அதிக வட்டிக்கு வெளியே கடன் கொடுத்து பணம் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மானியம் வீணாகிறது. எனவே வேளாண்மைக்கான நகைக்கடன் வட்டி உயர்த்தப்பட்டிருப்பதோடு மானியமும் ரத்துசெய்யப்படுகிறது’ என்பதுதான் அரசுத் தரப்பின் வாதம். தவறு நடப்பது உண்மைதான். வங்கி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதுதான் இத்தகைய தவறுகளுக்குக் காரணம்.
ரேஷன் விநியோகம், விவசாய சலுகைகள், கியாஸ் மானியம், மூத்தகுடிமக்கள் பென்ஷன் என அரசாங்கம் தரும் சலுகைகளின் பலன்கள் அனைத்தும் உண்மையான பயனாளிகளின் கைகளுக்கு நேரடியாக சென்று சேரவேண்டும் என்பதற்காகத்தான் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறோம். ஸ்மார்ட் கார்டு (ரேஷன்), ஆதார் கார்டு, கிஷான் கார்டு என்றெல்லாம் உருவாக்கிக் கொடுக்கிறோம். இதன் மூலமாக தவறுகள் களையப்படுவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். அந்த வகையில், விவசாயக் கடன்கள் உள்ளிட்ட அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கி, புல்லுருவிகள் ஊடுருவுவதைத் தடுத்து உண்மையான விவசாயிகளுக்கு பலன் கிடைக்கச் செய்வதுதானே சரியான தீர்வாக இருக்கும்!
பயிருடன் களைகளும் வளரத்தான் செய்யும். 'களைகளை ஒழிக்கிறேன்' என்று பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சாமல் இருப்பதுபோல் இருக்கிறது மத்திய அரசின் இந்த அறிவிப்பு.