பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கருத்துச்சுதந்திர மறுப்பைக் கண்டிக்கிறோம்

கருத்துச்சுதந்திர மறுப்பைக் கண்டிக்கிறோம்
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்துச்சுதந்திர மறுப்பைக் கண்டிக்கிறோம்

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறை, நீதிமன்ற அறிவுரைக்குப் பிறகு கையைக் கட்டிக் கொண்டது.

த்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன. ஆனால், இந்தப் போராட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் முறையைப் பார்க்கும்போது, நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தாக்கப்படுகிறார்கள். வரலாற்றாய்வாளர் ராமச்சந்திர குஹா போன்ற குறிப்பிடத்தக்க நபர்களும்கூட கைது நடவடிக்கைகளுக்குத் தப்பவில்லை. போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தையொட்டி கைதாகியுள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியின் குடும்பத்தினரைக்கூட சந்திப்பதற்கு கெடுபிடி காட்டப்படுகிறது. சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை விரட்டிச் சென்ற காவல்துறையின் அநாகரிக நடவடிக்கைகள் உச்சபட்ச அச்சுறுத்தலே!

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறை, நீதிமன்ற அறிவுரைக்குப் பிறகு கையைக் கட்டிக் கொண்டது. ஆனால், பேரணி முடிந்ததும் எட்டாயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. எல்லாவற்றையும்விட உச்சம், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்களுடன் சென்னையில் கோலம் போட்ட பெண்களையும் கைது செய்திருப்பதுதான். இத்தகைய அடக்குமுறைகள், தற்போது ஊடகங்களை நோக்கியும் பாய ஆரம்பித்துள்ளன. இந்தச் சட்டம் தொடர்பாக கருத்துக்கேட்பு நடத்திய ஜூனியர் விகடன் செய்தியாளர்களை மிரட்டும் வகையில் வழக்குகளைப் பதிந்துள்ளது காவல்துறை.

`இச்சட்டத்தின்படி இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்காது’ என்ற சூழலில், இலங்கை அகதிகள் மனநிலையை அறிந்து கட்டுரை வெளியிடத் திட்டமிட்டிருந்தது ஜூனியர் விகடன். தமிழகம் முழுக்க அம்மக்களைச் சந்தித்தனர் நிருபர்கள். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிருபர் மற்றும் புகைப்படக்கலைஞர் இருவர் மீதும் மூன்று பிரிவுகளின்கீழ் மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை ஆகிய இரண்டு காவல் நிலையங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. `மக்களிடம் பயம் அல்லது பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராகக் குற்றம்புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல், அச்சடித்து விநியோகித்தல்’ என்று பிணையில் விடமுடியாத சட்டப்பிரிவையும் பாய்ச்சியிருக்கின்றனர். இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் அடாவடி செயலே.

‘குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்துப் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்’ என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகமே தெரிவித்திருக்கும்போது, ஈழத் தமிழ் அகதிகளின் கருத்துகளை அறிய விரும்பியது எப்படி குற்றமாகும்?

ஊடகச்சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கையுள்ள அனைவரும் இதைக் கண்டிக்கவேண்டும். நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் இருக்கும் விகடன், பல சவால்களைச் சந்தித்திருக்கிறான்; கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவாக உறுதியாக நின்றிருக்கிறான். எந்தத் தருணத்திலும் கருத்துச்சுதந்திரம் காக்க விகடன் உறுதியாக நிற்பான்.